மின்தமிழ்மேடை: காட்சி 17 [ஏப்ரல் 2019]

மின்தமிழ்மேடை: காட்சி 17 [ஏப்ரல் 2019]
http://books.google.com/books?id=B9mTDwAAQBAJ

மின்தமிழ்மேடை: காட்சி 17 [ஏப்ரல் 2019]
http://books.google.com/books?id=B9mTDwAAQBAJ

தலையங்கம்:
மரபுப் பயணம்: பாரம்பரியம் மிக்க தமிழ் மரபை அறிந்து கொள்வோம்

வணக்கம்.
வரலாற்று நோக்கில் ஆராய முற்படும்போது தமிழகம் ஆய்வாளர்களுக்குப் புதிய சவால்களைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கின்றது. எத்தனை எத்தனையோ மரபுகள் செழித்து வளர்ந்த நிலம் தமிழ் பூமி. கிராமங்களாகட்டும்… சிறு நகரங்களாகட்டும்.. பெரிய நகரங்கள் ஆகட்டும்.. சாலைகள், தெருக்கள் என எல்லா பகுதிகளிலும் புராதனச் சின்னங்கள் பல, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நிறைந்து காணப்படுகின்றன.

மூதாதையர் வழிபாடு, இயற்கை வழிபாடு, இறந்தோர் வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு என்று மனித இனத்தோடு நெருக்கமான உறவு கொண்ட உளவியல் ரீதியான இறை நம்பிக்கைகள் ஒருபுறம். பண்டைய வழிபாட்டுக் குறியீடுகளாக அமைகின்ற கொற்றவை வழிபாடு, நவகண்ட வழிபாடு, வீரர்கள் வழிபாடு, தாந்திரீக வழிபாடு என்பது ஒரு புறம். அமைப்பாக்கப்பட்ட வழிபாடுகளாகத் தத்துவ அடிப்படைகளோடு இணைந்து வருகின்ற சாக்தம், பௌத்தம், சமணம், வைணவம், சைவம், கிருத்துவம், இஸ்லாம் மற்றும் ஏனைய பல வழிபாடுகள் என இவை ஒரு புறம். இவையெல்லாம் தமிழகத்தின் பன்முகத்தன்மையை விளக்க நம் முன்னே சான்றுகளாக இருப்பவை. இந்த பன்முகத் தன்மை தான் தமிழக வரலாற்றின் வளம். தமிழ் நிலத்தின் சொத்து!

சடங்குகள், நாட்டார் இலக்கியங்கள், கூத்துக்கள், நாடகங்கள் இவை அனைத்தும் தொன்றுதொட்டு தமிழர் மரபின் தொடர்ச்சியாக, தமிழ் நிலத்தில் வாழ் மக்களின் சிந்தனைகளின் வெளிப்பாடுகளாகப் பரிணாமம் பெற்று மக்கள் வாழ்வியலில் அங்கத்துவம் பெற்றுத் தொடர்கின்றன. இந்தப் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றைத் தன்மையை உருவாக்க முற்பட்டால் தமிழ் நிலத்தின் வளமான மரபு இறந்து போகும். ஒற்றை தெய்வ மரபு தமிழக நிலப்பரப்பின் அடையாளமல்ல. தமிழ் நிலத்தின் அடையாளம் இந்தப் பன்முகத்தன்மையே.

தமிழக வரலாற்றையும், தமிழ்மொழியின் தொன்மையையும், நூல்களின் வாசிப்பின் வழி அறிந்து கொள்ளும் அதே நேரம், நேரடியாகச் சென்று, புராதன சின்னங்களைப் பார்த்து அனுபவித்து அறிந்து கொள்வது சிறந்த அனுபவமாக அமையும். அவை தரும் அனுபவங்கள் மனதில் பசுமையாகப் படிந்திருக்கும். இந்தக் கருத்தின் அடிப்படையில் தமிழ் மரபு அறக்கட்டளை இந்த ஆண்டு ஒரு வரலாற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.

மார்ச் மாதம் 17ஆம் தேதி தமிழகத்தின் சென்னைக்கு அருகாமையில், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட புராதன சின்னங்கள் சிலவற்றை தொல்லியல் ஆய்வாளர்களுடன் இணைந்து சென்று அவற்றை நேரில் பார்த்து ஆராய்ந்து வர இந்தப் பயணம் அடிப்படையை வகுத்திருந்தது. 35 தன்னார்வலர்கள் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டனர். மகேந்திரவாடி, திருவல்லம், மேல்பாடி, ஆற்காடு, மாமண்டூர் ஆகிய பகுதிகளுக்கு இந்த பயணத்தின் போது நேரடியாகச் சென்று காணும் வாய்ப்பு அமைந்தது. மனதில் ஆழமாகப் பதியும் வகையில் வரலாற்றுத் தகவல்களை இப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நல்வாய்ப்பை இந்தப் பயணம் வழங்கியது.

இத்தகைய வரலாற்றுப் பயணங்களும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர் பணிகளில் ஒன்றாக இவ்வாண்டு தொடக்கம் இணைக்கப்படுகின்றது என்பதை வாசகர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றோம். முதலாம் மரபுப் பயணம் தந்த வெற்றியின் அடிப்படையில் இவ்வாண்டு மேலும் ஒரு மரபுப் பயணம் இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறும். அது தொடர்பான செய்திகளை அறிய தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கங்களையும், அறிவிப்புச் செய்திகளையும் தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

சீரிய ஆய்வுகளின் வழி பன்முகத்தன்மை கொண்ட பெரும் பாரம்பரியம் மிக்க தமிழ் மரபை அறிந்து கொள்வோம். தமிழர் மரபைப் பேணிக்காப்போம்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2021 மின்தமிழ்மேடை | Design by ThemesDNA.com
top