Sunday, December 8, 2024
Home மின்தமிழ்மேடை வெளியீடு மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 29 [ஏப்ரல் – 2022]

மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 29 [ஏப்ரல் – 2022]

by Themozhi
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்
மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 29 [ஏப்ரல் – 2022]

வணக்கம்.

தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…“மின்தமிழ்மேடை”
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “மின்தமிழ்மேடை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

கடந்த ஏழு ஆண்டுகளாக, காலாண்டு இதழாக 2015ம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.

காலாண்டிதழ் வரிசையில் இந்த “29 வது மின்தமிழ்மேடை” இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது
“எளிய வகையில் வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்”
என்பதாகும்.

மின்தமிழ்மேடை – காட்சி: 29 [ஏப்ரல் – 2022] வெளியீடு
இதழை இணைப்பில் காண்க.

இணையம் வழி படிக்க:
கூகுள் புக்ஸ் தளத்தில் – https://books.google.com/books?id=9pdrEAAAQBAJ

தமிழ்மரபு அறக்கட்டளை தளத்தில் – http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2022/04/THFi-MinTamilMedai-29A5sizePDF.pdf

பொறுப்பாசிரியர்: முனைவர் தேமொழி

வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


தலையங்கம்: எளிய வகையில் வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்

வணக்கம்.
தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுத்துறை என்பது அத்துறை ஆய்வாளர்களின் கவனத்தில் மட்டுமே இருந்த ஒரு துறை என்ற நிலை மாறி கடந்த சில ஆண்டுகளில் பொது மக்களின் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்க்கும் ஒரு துறையாகப் பரிணாம மாற்றம் அடைந்துள்ளது. இந்த நிலைக்கு பல்வேறு செயல்பாடுகளைக் காரணமாகக் கூறலாம்.

குறிப்பிடத்தக்க வகையில் வரலாற்று மற்றும் தொல்லியல் கள ஆய்வுச் செய்திகள் பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவருவது பொதுமக்களின் கவனத்திற்கு அவை பற்றிய செய்திகளைக் கொண்டு சென்றிருக்கிறது. அடுத்து பல்வேறு சமூக மற்றும் கல்வி நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் ஏற்பாடு செய்யும் மரபுப் பயணங்கள், கல்விச் சுற்றுலா, வரலாற்றுப் பயணங்கள் ஆகியன குறிப்பிடத்தக்க வகையில் பொதுமக்களிடையே வரலாற்றுச் செய்திகளை நேரில் பார்த்து அறிந்து கொள்ளவும் அவற்றின் சிறப்பைப் புரிந்து கொள்ளவும் தங்கள் வாழ்க்கையோடு அவற்றை தொடர்புப்படுத்திக் காணும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

இதற்கு அடுத்ததாக, தற்சமயம் வெளிவருகின்ற ஏராளமான வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்ந்த பொதுமக்கள் வாசிப்பிற்கான நூல்களைக் கூறலாம். இத்தகைய நூல்கள் பொதுமக்களின் கைகளில் கிடைக்கும் வகையில் தமிழகமெங்கும் புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்ந்த அறிஞர்களின் நூல்கள் மட்டுமன்றி சமூகவியல், மானுடவியல் மற்றும் செய்தித்துறை, தமிழ்த்துறை போன்ற மாறுபட்ட துறைகளைச் சார்ந்த அறிஞர்களது தீவிரமான ஆர்வம் என்பது தரமான ஆய்வுத் தரம் கொண்ட நூல்கள் உருவாக்கம் பெறுவதில் பங்களித்திருக்கின்றன. இதுவே இன்று குறிப்பிடத்தக்க வகையில் வரலாற்று ஆய்வு நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாகின்றன எனலாம்.

பொதுமக்களிடம் வரலாற்றுச் செய்திகளைத் தரமான வகையில் உறுதியான சான்றுகளுடன் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அதன் ஒரு பிரிவாகப் பதிப்பகப் பிரிவை 2019ஆம் ஆண்டு தொடங்கினோம். இப் பதிப்பக பிரிவின் முதல் நூலாக ‘திருவள்ளுவர் யார்- கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்’ என்ற நூல் வெளியீடு கண்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளில் 13 நூல்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகளாக வந்துள்ளன.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் ஆய்வுத் தரமும் வரலாற்றுச் செய்திகளின் உண்மைத் தன்மையும் கொண்ட வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதில் பதிப்புத்துறை மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றது. இப்பதிப்பகத் துறையின் பொறுப்பாளராகச் செயல்படும் என்னுடன் இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் தேமொழி, மற்றும் மலர்விழி பாஸ்கரன், முனைவர் பாப்பா, முனைவர் பாமா, ஹேமலட்சுமி ஆகியோர் கொண்ட குழு சிறப்பாக பணியாற்றி வருகின்றது.

வரலாறு மற்றும் தொல்லியல் துறை செய்திகள் என்பன கல்வித் தளத்தில் இருக்கின்ற அறிஞர்களுக்கு மட்டுமல்ல, மாறாக எல்லா தளத்திலும் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கும் எளிய வகையில் வரலாற்றைக் கொண்டு சேர்ப்பது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவின் நோக்கமாகும்.

தமிழகத்தில் இருக்கின்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு புத்தகக் கண்காட்சிகளின் வழியாகவும், இணைய வழி புத்தக விற்பனையாளர்களின் வழியாகவும் தமிழ் நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. இதேநிலை உலகில் அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மிக அதிகமாக வாழ்கின்ற மலேசியா, சிங்கை, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் புத்தகக் கண்காட்சிகளை ஏற்படுத்துவதன் வழி நூல்கள் வாசிப்பது, அதிலும் குறிப்பாக வரலாற்றுத் தகவல்கள் கொண்ட நூல்களைப் பொதுமக்கள் வாசிக்கும் வழி செய்வது அவசிய தேவையாகின்றது. தமிழக அரசின் சீரிய பற்பல பணிகளில் இதனையும் ஒன்றாகக் கொண்டு, தமிழகத்திற்கு வெளியே புத்தகக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்ய அரசு முன்வந்தால் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் போன்ற தரமான பல்வேறு நூல்களை உருவாக்கி வழங்கும் பதிப்பகங்கள் அதனை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி தரமான ஆய்வு நூல்களைத் தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற முடியும். இது தமிழ் நூல் வாசிப்பில் ஒரு மாபெரும் புரட்சியை நிச்சயம் உருவாக்கும்!

தமிழால் இணைவோம்.

அன்புடன்
முனைவர் க. சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like