Tuesday, July 16, 2024
Home மின்தமிழ்மேடை வெளியீடு மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 26 [ஜூலை – 2021]

மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 26 [ஜூலை – 2021]

by Themozhi
0 comment

மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 26 [ஜூலை – 2021]
இதழை கூகுள் புக்ஸ் தளத்தில் படிக்க:
http://books.google.com/books/about?id=UsVEEAAAQBAJ

இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது
“நூல்களை அறியத் தடையேது? அறிவோம் நூல்களை!”
என்பதாகும்.

தலையங்கம்: நூல்களை அறியத் தடையேது? அறிவோம் நூல்களை!
— முனைவர் க.சுபாஷிணி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மற்றுமோர் சமூக நலன் சார்ந்த திட்டம் ‘சுவலி’ ஒலிப்புத்தக மென்பொருள். இதன் வெளியீடு ஜூலை 18ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. சுவடி நூல்களை ஒலிவடிவத்தில் கேட்டுப் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இந்தத் திட்டத்தில் கைப்பேசி வழியாக ஒலிவடிவத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன.
சுவலி எவ்வகையில் ஒருவருக்குப் பயன்படும்?

அ. நம் சூழலில் சிலருக்குத் தமிழ் நூல்களை வாசிக்க ஆர்வம் இருக்கும்; ஆனால் மொழித்திறன் இல்லாமையால் வாசிக்கத் தெரியாது… இத்தகையோருக்கு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைக் கேட்பதன் வழி நல்ல தரமான நூல்களை அறிமுகப் படுத்துவது

ஆ. பார்வைத் திறனற்றோருக்கு ஏராளமான நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை ஒலிப்புத்தகமாக அறிமுகப்படுத்துவது

இ. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் கைவசம் இல்லாத போதும் அவற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு ஒலிப்புத்தகமாக வழங்குவது

ஈ. சிலருக்குத் தூரப்பயணங்களில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது பாடல்களைக் கேட்பதற்குப் பதிலாக நூல்களை வாசித்துக் கொண்டே செல்லலாம் என்று தோன்றும். ஆனால் ஒலிப்புத்தகமாக இருக்கும் போது அது சாத்தியப்படும்

கைப்பேசி இல்லாதவர்கள் குறைவு என்ற நிலை ஏற்பட்டுவிட்ட இக்காலச் சூழலில் இப்படிப் பல வகையில் உங்களுக்கு சுவலி உதவ முடியும்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் சுவலி திட்டக் குழுவினர் பொது மக்கள் நலன் கருதி தங்கள் நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிட்டு ஒலிப்புத்தகங்களை உருவாக்கும் பணியில் இணைந்துள்ளனர். மலர்விழி பாஸ்கரன், ப்ரின்ஸ் கென்னத், செல்வமுரளி ஆகிய மூவரது துணையுடன் ஆர்வமிக்க தன்னார்வலர்களுடன் இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உலகின் எப்பகுதியில் இருந்தாலும் ஆர்வமுள்ளோர் இப்பணியில் நீங்களும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆரவாரமின்றி அமைதியாக நாம் செய்யக்கூடிய ஒரு சமூகப் பணி இது!

தமிழகத் தொல்லியல் துறையினால் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத் தொடக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டு நிகழ்ந்து வருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகளின் போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உறைகிணறுகள், முதுமக்கள் தாழிகள் திறந்த நிலையிலும் மூடிகளுடனும் என்ற வகையில் கிடைத்திருக்கின்றன. இவற்றுக்குள் காணப்பட்ட எலும்புக்கூடுகள், பற்கள் மற்றும் பல்வேறு சான்றுகளை ஆய்வுக் குழு ஆய்வு செய்து வருகின்றது என்ற செய்திகளைத் தொடர்ந்து வாசிக்கின்றோம். ஆதிச்சநல்லூர் ஈமக்கிரியைப் பகுதி என்று பரவலாகக் கூறப்பட்ட நிலையில் அதன் அருகேயே சிவகளையில் மக்கள் வாழ்விடப் பகுதி தொடர்பான பல்வேறு ஆதாரங்களும் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இது தமிழகத் தொல்லியல் அகழாய்வு கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்துக்கனவாக அமைகிறது.

நீண்ட காலமாக அகழாய்வுப் பணிகள் செய்யப்படாமல் இருந்த கொற்கையில் மீண்டும் விரிவான கள ஆய்வுப் பணிகள் தொடங்கியிருப்பதும் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.

கீழடியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஆய்வுப்பணியில் நம் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அகரம் பகுதியில் அழகிய கொண்டையுடன் கூடிய ஒரு பெண் உருவம் போன்ற தோற்றம் கொண்ட ஒரு மண்பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான காலகட்டத்தில் சிகை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் அளித்து உயர் பண்பாட்டுடன் தமிழ்ச் சமூகம் வாழ்ந்தது என்பதைச் சான்று பகரும் ஆதாரமாகவும் இது அமைகிறது. இதுமட்டுமல்ல; தொடர்ந்து உறைகிணறுகள், தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள் என ஏராளமான அரும்பொருட்கள் கிடைத்த வண்ணமுள்ளன.

கீழடி மட்டுமன்றி ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை எனப் பல பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகள் தமிழ் வரலாற்றில் முக்கியத்துவம் பெறக்கூடிய பல்வேறு சான்றுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இத்தகைய தொல் பொருட்களின் மரபியல் மரபணு சோதனைகளைச் செய்ய ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மரபணு சோதனை ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கின்றது (https://www.hindutamil.in/news/tamilnadu/688231-sivakalai-excavation-1.html). கரிம ஆய்வுகளை உடனுக்குடன் செய்து தொல்பொருட்களின் காலச் சூழலை நிர்ணயப்படுத்தும் செயல்பாடுகள் இதனால் துரிதப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற அகழாய்வுகளோடு மட்டும் நின்று விடாமல் உலகளாவிய வகையில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளையும் அவற்றின் போது கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களையும் தமிழக ஆய்வாளர்கள் அயலக ஆய்வறிஞர்களுடனும் இணைந்த வகையில் ஆய்வு செய்யவும், இணைந்த வகையிலான கூட்டு முயற்சிகளையும் கருத்தரங்கங்களையும் ஏற்பாடு செய்யவும் தமிழகத் தொல்லியல் துறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்

You may also like