மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 23 [அக்டோபர் – 2020]
https://books.google.com/books/about?id=IjsEEAAAQBAJ
தலையங்கம்: கடிகையால் கவனயீர்ப்புக்கு உள்ளாகும் கல்வி மற்றும் ஆய்வுப் புலங்கள்
- முனைவர்.க.சுபாஷிணி
வணக்கம்.
suba.png
மின்தமிழ் மேடை காலாண்டிதழின் வழி உலகத் தமிழர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கொரோனா பெருந்தொற்று பல்வேறு சங்கடங்களை உலகளாவிய வகையில் ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையில் தொய்வின்றி இணைய வழியாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பல்வேறு நடவடிக்கைகளின் வழியாகத் தமிழ் வரலாற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நாம், சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளையும் கவனிக்க மறப்பதில்லை என்பதற்குச் சான்றாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நடவடிக்கைகள் திகழ்கின்றன.
கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்தியிருக்கின்றோம். அவை தமிழர் வரலாறு, பண்பாட்டியல், மொழி தொடர்பான ஆய்வுகள் என்ற ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன.
கடிகை
தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகத்தின் தெற்கு தூர கிழக்காசியவியல் நடுவம் -(Institute of South and East Asian studies ISEAS) என்ற தனித்துறை கிழக்காசியவியல் மற்றும் தூரக் கிழக்காசியவியல் ஆய்வுகளை முன்னெடுக்கும் நோக்கத்துடன் 8.8.2020 அன்று தொடங்கப்பட்டது.
நகரங்களின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 3 ஆண்டுகளாக டிஜிட்டல் மெட்ராஸ்
என்ற சிறப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகின்றோம். இந்த ஆண்டு இரண்டு நாட்கள் நிகழ்வாக 22-23 ஆகஸ்ட் மாதம் இரு நாட்கள் காலை 11 மணி தொடங்கி இரவு 9 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளைத் தாங்கி இந்த இரண்டு நாட்கள் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் அனைத்து காணொளிப் பதிவுகளையும் டிஜிட்டல் மெட்ராஸ் வலைப் பக்கத்தில் www.digital-madras.tamilheritage.org காணலாம்.
நமது பயணத்தில் நாம் 20ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம். 2001 ஆகஸ்ட் 27 ஆம் தேதி தமிழ் மரபு காப்பு என்ற குறிக்கோளுடன் பணியாற்றத் தொடங்கிய நமது அரசு சாரா தொண்டு நிறுவனமான தமிழ் மரபு அறக்கட்டளை, கடந்த 19 ஆண்டுகளில் பன்னாட்டு அறக்கட்டளை நிறுவனமாக விரிந்து பல தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆதரவுடன் தொடர்ந்து பற்பல பணிகளில் மனநிறைவுடன் பயணிக்கின்றது . (2001லிருந்து 2020 வரை கடந்து வந்த பாதை விழியப் பதிவு வெளியீட்டைக் காணலாம் https://youtu.be/cK44QcuMod4 )
உலகளாவிய நீண்டகால கடல் பயண அனுபவங்களைக் கொண்ட மூத்த வரலாற்றாய்வாளர் கடலோடி
நரசையாவின் அனுபவப் பகிர்வாக ஐந்து நாட்கள் கடலோடி நரசையா உடன் கடல் ஆடுவோம்!
என்ற தலைப்பில் 5 நாட்கள் தொடற் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
சங்கம் பீடியா
– இணையம் வழி சங்கத்தமிழ் ஆய்வுகளின் தொகுப்பாக ஒரு சிறப்புப் பக்கம் தமிழ் மரபு அறக்கட்டளையின் புதிய திட்டமாக செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. பேராசிரியர் முனைவர் பாண்டியராஜா அவர்களின் நீண்டகால முயற்சியான சங்கச்சோலை, சங்கத்தமிழ் தொடரடைவு, சங்கச்சொற்களஞ்சியம் ஆகிய வலைப்பக்கங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் அடங்கிய பக்கமாக விளங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு வருகின்றது.
நல்லாசிரியர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று செப்டம்பர் 18ஆம் தேதி தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்து நிகழ்த்தியது.
இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதும், பசுமையை நேசிக்கும் பண்பை இளையோரிடம் கொண்டு சேர்க்க வேண்டியதும் நமது முக்கிய கடமை என்ற நோக்கத்துடன் மதுரை மாவட்டத்தில் உள்ள சங்கரலிங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முயற்சியில் அக்கிராமத்தில் 600 பனை விதைகளை நடும் நிகழ்வும் முருங்கை மரங்களை நடும் நிகழ்வும் செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது.
வரலாற்று ஆய்வுகளில் அதிகம் கவனம் பெறாத துறையாக நெய்தல் நில ஆய்வுகள் அமைந்துவிடுகின்றன. தனித்துவத்தைக் கொண்டிருக்கின்ற இந்தத் துறையில் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இரண்டு நாள் சிறப்பு நிகழ்ச்சியாக நெய்தல் நில பண்பாட்டு ஆய்வுகள்
என்ற பொருண்மையில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களது உரை சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் என்ற வகையில் செப்டம்பர் 26-27 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றன.
மேலும் கடிகை
தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகத்தின் ஐரோப்பிய தமிழியலாய்வுத் துறை 10.8.2020 அன்று தொடங்கப்பட்டது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். -குறள் 664
என்ற குறளுக்கொப்ப, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் வழியாக தமிழர் வரலாறு, ஆவணப்பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளை செவ்வனே செய்து வரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுப் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
தமிழால் இணைவோம்! தமிழால் சிறப்போம்!
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு