Tuesday, June 25, 2024
Home மின்தமிழ்மேடை வெளியீடு மின்தமிழ்மேடை: காட்சி 19 [அக்டோபர் 2019]

மின்தமிழ்மேடை: காட்சி 19 [அக்டோபர் 2019]

by THFiadmin
0 comment
மின்தமிழ்மேடை: காட்சி 19 [அக்டோபர் 2019]
https://books.google.com/books?id=4se3DwAAQBAJ

மின்தமிழ்மேடை: காட்சி 19 [அக்டோபர் 2019]
https://books.google.com/books?id=4se3DwAAQBAJ

தலையங்கம்:
தமிழர் பண்பாட்டின் வரலாற்றுத் தேடல்கள்

வணக்கம்.

தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் தேடலில் ஆதாரப்பூர்வமான சான்றுகள் எவ்வளவு முக்கியமோ அதே போல, வரலாற்றுத் தகவல்களைச் சரியாக வாசித்து அறிந்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வதும் அவசியம். தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாக இவ்வாண்டு தொடக்கம் கல்வெட்டு பயிற்சிகளைத் தொடங்கியிருக்கின்றோம். தமிழி எழுத்துக்களை அறிதல், வாசித்தல், எழுதுதல் என மூன்று நிலைகளை மையப்படுத்தி இரு நாள் நிகழ்ச்சியாகக் கல்வெட்டு பயிற்சிப்பட்டறை தமிழகத்தின் சென்னையில் செப்டம்பர் மாதம் 28-29 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன. நீண்ட கால களப்பணி அனுபவம் கொண்ட கல்வெட்டியல் அறிஞர்கள் டாக்டர்.பத்மாவதி, டாக்டர்.மார்க்சிய காந்தி ஆகிய இருவரது வழிகாட்டுதலில் 140 மாணவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது கனடா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் வந்து இப்பயிற்சியில் பதிந்து பயிற்சி பெற்றனர்.

கீழடி அகழாய்வின் நான்காம் கட்ட அகழாய்வின் இடைக்கால அறிக்கை நமக்கு மிக முக்கியமானதொரு வரலாற்றுத் திருப்பத்தை அளித்திருக்கின்றது. ஒரு பானை ஓட்டில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்து, தமிழ் எழுத்தின் பழமையை கிமு.6ம் நூற்றாண்டுக்கு நகர்த்திய செய்தியானது இதுகாறும் தமிழி எழுத்து அசோகன் பிராமி எழுத்துருவிலிருந்து தான் உருவாகியது என்ற கருதுகோளைத் தகர்த்திருக்கின்றது. இச்செய்தி மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற வேண்டியது அவசியம் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைகின்றது. இதன் தொடர்ச்சியாக நீண்டகாலம் வெளியிடப்படாமல் முடங்கிக்கிடக்கும் ஆதிச்சநல்லூர் 2004-2005ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளின் அறிக்கை வெளியிடப்படவேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியுடன் இணைந்த வகையில் ஒரு நாள் கருத்தரங்கம் அக்டோபர் மாதம் 4ம் தேதி நடைபெற்றது. தொல்லியல் அகழாய்வு பற்றிய நூறு கட்டுரைகள் அடங்கிய ஆய்வு மலர் இதனையொட்டி வெளியிடப்பட்டது.

தூத்துக்குடியும் நெல்லை மாநகரமும் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டைய நகரங்கள். நீண்ட கால கடல் வழி போக்குவரத்து உலகின் பல பகுதிகளில் உள்ள நாடுகளுடன் இப்பகுதி மக்கள் கொண்டிருந்த வணிகத்தொடர்பையும் அவை ஏற்படுத்திய சமூக மற்றும் மானுடவியல் பார்வையை அறிந்து கொள்ளும் வகையிலும் பாண்டியர் மற்றும் சேர சோழர்களின் கட்டுமான கலையை ஆராயும் வகையிலும் இரு நாள் மரபுப் பயணத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 5,6 ஆகிய நாட்களில் நிகழ்த்தியது. இதில் கொற்கை, ஆதிச்சநல்லூர், புன்னைக்காயல், சாயர்புரம், மன்னார்கோயில், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்குப் பயணத்தில் கலந்து கொண்டோர் சென்றிருந்தனர். இவர்களுக்கு வரலாற்றுக் குறிப்புகளை கல்வெட்டியலாளர் டாக்டர்.பத்மாவதி, டாக்டர்.சசிகலா ஆகியோர் வழங்கினர்.

தமிழ் நிலத்திலிருந்து இலங்கைத் தீவு புவியியல் அடிப்படையில் பிரிந்திருந்தாலும், சமூகவியல் அடிப்படையிலும் மொழியின் அடிப்படியிலும் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பினை நாம் பிரிக்க இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுக் குழுவினர் ஒரு வாரப் பயணமாக இலங்கைக்குச் சென்றிருந்தனர். இப்பயணத்தில் மன்னார் தீவு, நெடுந்தீவு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், மாத்தளை, ரத்னபுரி, கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் களப்பணிகள் நிகழ்ந்தன. இப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புகள், மக்களின் வாழ்வியல் நிலை, தற்கால சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வுப் பதிவுகள் செய்யப்பட்டன.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் பொதுவாக ஈழத்தமிழர்கள் என்ற நில எல்லைக்குள்ளேயே நின்று விடுவதைக் காண்கின்றோம். சிங்கள மொழி கிபி.5ம் 6ம் நூற்றாண்டு வாக்கில் முழுமையாக உருவாக்கம் பெறுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் மக்களின் தமிழ் மொழி சார்ந்த இலங்கைச் சுவடுகள் தமிழின் தொன்மையைச் சான்று பகர்கின்றன. அண்மைய யாழ் பல்கலைக்கழகத்தின் கட்டுக்கரை அகழாய்வுச் செய்திகள், மற்றும் அனுராதபுரத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துக்கள் ஆகியவை இலங்கையில் தமிழின் தொன்மையை வலியுறுத்தும் முக்கிய சான்றுகளாகின்றன.

இன்றைய நிலையில், இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களின் சமூக, வரலாற்று, மொழி, சமயம் சார்ந்த ஆய்வுகளை ஒரு பொதுமையான அடிப்படையை வைத்து ஆராய்வது பலனளிக்காது.

-ஈழத்தமிழர்கள்
-மலையகத் தமிழர்கள்
-நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் வாழும் தமிழை மறந்த சிங்களம் மட்டுமே பேசும் பூர்வகுடி இலங்கை தமிழ்மக்கள்
-மன்னார், புங்குடுதீவு போன்ற தீவுகளில் வாழும் தீவு தமிழ் மக்கள்
-இலங்கைக்கு நெடுந்தூரத்தில் இருக்கும் நெடுந்தீவு மக்கள்
-கிழக்கு மாகாண மக்கள்
-கொழும்பு தலைநகரில் வாழும் தமிழ மக்கள்

..என நில அடிப்படையில் வேறுபட்டிருக்கும் தமிழ் மக்களின் சமூக, வரலாற்று, தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளையும் செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியமாகின்றது. தமிழின் தொன்மையை, இலங்கையில் தமிழர் வரலாற்றின் பன்முகத்தன்மையைப் பதிந்து ஆவணப்படுத்தி , மக்களின் சூழலுக்கேற்ற தமிழ் மொழி வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் மேம்பாட்டினைக் கொண்டு வர வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்த வகையில் மிக அமைதியாக ஆனால் மிக உறுதியாகக் கடந்த 15 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்திலிருந்து செயல்பட்டு வரும் நூலகம் அமைப்பு தொடர்ந்து மின்னாக்கப்பணி களைச் செய்து வருகின்றது. இதன் சேகரத்தில் உள்ள அரிய ஆவணங்கள் மிகச் சிறந்த களஞ்சியமாக உருவாகி வளர்ந்துள்ளன. இதே போல மலையக மக்களின் வாழ்வு, தீவுப்பகுதி மக்களின் வாழ்வு, இலங்கையில் டச்சு, போர்த்துக்கீசியர், ஆங்கிலேயர் கால வரலாறும் அவை ஏற்படுத்திய தாக்கம் தொடர்பான ஆய்வுகளும் பெருக வேண்டியதும் அவை பற்றிய கலந்துரையாடல்களும் அவசியமாகின்றது.

இச்சூழலில் உலகத்தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தி ஒன்றினைப் பகிர்வதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். சிங்களவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையின் ஊவா மாகாணத்தில் தமிழ் வென்றுள்ளது.

மலையகத்தின் ஊவா மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகள் முந்தைய சிங்கள மொழிப் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழில் பெயர் சூட்டப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை நிகழ்ந்திருக்கின்றது. ஊவா மாகாணத்தின் தமிழ்க்கல்வி அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்களின் உறுதியான முயற்சியும், தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்பும் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. திருவள்ளுவர், மலைமகள், கம்பன், பெரியார், பாரதிதாசன், பாரதியார், கலைவாணி, பாரி, புகழேந்தி, குறிஞ்சி எனப் புதிய அழகிய பெயர்கள் 140 பள்ளிகளுக்குச் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இம்மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் சிங்களப் பெயர் சூட்டப்பட்டிருந்தது முடிவுக்குக் கொண்டு வந்ததில் தமிழ் மரபு அறக்கட்டளை, மாகாணத்தின் தமிழ்க்கல்வி அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான், மற்றும் இம்மாநில தமிழ் மக்களோடும் சேர்ந்து பெருமை கொள்கிறது.

உலகளாவிய அளவில் தமிழின் வளமையையும் தொன்மையையும் பறைசாற்றும் பல பணிகள் தொடர்ந்து செயலாக்கம் பெறவேண்டிய கால சூழலில் நாம் இருக்கின்றோம். எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் தமிழ் மரபு அறக்கட்டளை அவற்றை எதிர்கொண்டு தமிழுக்காற்றும் தொண்டினைத் தொடர்வோம். ஆக்ககரமான, தமிழுக்கான மேம்பாட்டுச் செயல்பாடுகளில் நம் கவனத்தைச் செலுத்துவோம். தமிழின் பெருமையை நிலைநாட்டும் நம் பணியைத் தொடர்வோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

You may also like