Saturday, October 5, 2024
Home மின்தமிழ்மேடை வெளியீடு மின்தமிழ்மேடை: காட்சி 16 [ஜனவரி 2019]

மின்தமிழ்மேடை: காட்சி 16 [ஜனவரி 2019]

by THFiadmin
0 comment
மின்தமிழ்மேடை: காட்சி 16 [ஜனவரி 2019]
https://books.google.com/books?id=cSOEDwAAQBAJ

ன்தமிழ்மேடை: காட்சி 16 [ஜனவரி 2019]
https://books.google.com/books?id=cSOEDwAAQBAJ

தலையங்கம்:
இலங்கையில் தமிழ் மரபு அறக்கட்டளை …

வணக்கம்.

2018ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது இலங்கைக்கான நமது பயணம். நீண்ட நாள் திட்டமாக இருந்த இலங்கைக்கான பயணமும், களப்பணிகளும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை இலங்கையில் உருவாக்கம் பெற தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கின்றது.

இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விரிவுரைமண்டபத்தில் 29.10.2018 அன்று நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளையை வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் பல்கலைக்கழகத்தில் தொடக்கினோம். இந்த நிகழ்வில் துணைவேந்தரின் பிரதிநிதியாக வந்து வாழ்த்துரை வழங்கினார் சித்தமருத்துவத்துறையின் தலைவர் பேரா.மிகுந்தன். அவரோடு கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.சுந்தர், யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம், தமிழ் மரபு அறக்கட்டளை இலங்கை பொறுப்பாளர் ஆசிரியர்.வாலண்டீனா இளங்கோவன், முனைவர்.க.சுபாஷிணி, பேராசிரியர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் மாணவர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்தப் பயணத்தின் போது இலங்கையின் யாழ்ப்பாணத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளான யாழ் நூலகம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, டச்சுக் கோட்டை, கந்தரோடை, நல்லூர் கந்தசுவாமி கோயில், கீரிமலை, சங்கமித்திரை முதன் முதலாக வந்திறங்கிய பகுதி என அறியப்படும் மாதகல், குறும்பசிட்டி, யாழ் நூலகம், சர்.பொன்.இராமநாதன் பெண்கள் கல்லூரி போன்ற பல பகுதிகளில் களப்பணியாற்றிப் பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கை மரபுரிமை சிறப்புப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அப்பதிவுகளை http://www.srilanka.tamilheritage.org/ எனும் பக்கத்தில் காணலாம்.

கி.பி 19ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இலங்கைக்கு வந்த தமிழ் மக்கள் இராமேஸ்வரம் வழியாக மரக்கலங்களில் பயணித்து பின்னர் மன்னார் வந்தடைந்து அங்கிருந்து கால் நடையாகவே மலையகம் வரை வந்திருக்கின்றனர். இது மிகக்கடினமான ஒரு பாதை. ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் இதன் போது நிகழ்ந்திருக்கின்றன. அப்படி வந்த தமிழ் மக்கள் வந்து ஒன்று கூடிய முக்கிய இடமாக “மாத்தளை” கருதப்படுகின்றது.

மலையகத்தமிழர்களின் முக்கிய தொழில் தேயிலைத் தோட்டத்தைச் சார்ந்ததாகவே அமைகின்றது. இங்கு ஆண்களும் பெண்களும் சலிக்காது உழைக்கின்றனர். பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்களாக ஆங்கிலேயர்களும், இந்தியர்களும், சிங்களவர்களும் இருக்கின்றனர். மலையகத்தமிழ் மக்களின் பொதுப்பிரச்சனையாக அமைவது அம்மக்களுக்குச் சொந்த வீடு இல்லாமையும், ஓய்வூதியச் சலுகைகள் ஏதும் இல்லாமையும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையும் எனலாம். இங்கு இஸ்லாமியர்கள் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்கின்றனர். சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் அனைவரிடையே இயல்பான நட்புணர்வு வெளிப்படுகின்றது. தமிழ் பேசும், எழுதும் சிங்களவர்கள் சிலரைத் தோட்டங்களில் நேரடியாகக் கண்டு உரையாட முடிகின்றது. பெரும்பாலான தமிழ் மக்கள் சிங்கள மொழியும் பேசுகின்றனர். தமிழ் மக்கள் வழிபடும் தெய்வங்களாக, பிள்ளையார், மாரியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள் அதிகமாக உள்ளன. யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஊர் நூலகங்களைக் காண்கின்றோம். ஆனால் மலையகப் பகுதியில் நூலகங்களை அதிகம் காண முடியவில்லை. அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளே இங்கு அதிகமாக மக்களை வாட்டும் நிலை இருப்பதால் இந்த நிலையோ என எண்ணத் தோன்றுகிறது.

மலையகம் முழுமையுமே தூய்மையாக உள்ளது. தமிழக வகை உணவுகளை இங்கே கடைகளில் காண்கின்றோம். தமிழ்ப்பள்ளிகள் அனைத்துமே “வித்யாலயா” என்ற சமஸ்கிருத பெயருடனேயே வழக்கில் உள்ளன. தமிழகத்தில் 1950களின் காலகட்டத்து மணிப்பிரவாள நடைபோல பல சமஸ்கிருத பயன்பாடு இருப்பதை இலங்கையில் காண்கின்றோம். பேருந்து பயணங்கள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்லும் முக்கிய போக்கு வரத்துச் சாதனமாக உள்ளது. தோட்டத்தில் தேயிலைப் பறிக்கும் தொழிலில் தமிழ்ப்பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். கால்களில் அட்டை கடித்து துன்பப்படுவது என்பது அவர்களது வாழ்க்கையின் இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டதால் இவ்வூழியர்கள் பலரது கால்விரல்கள் மிக மோசமான நிலையில் இருப்பதைக் காணலாம். தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாடு அவர்களது கல்வி மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியப்படும்.

நீண்ட கால போரினால் இலங்கையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் பல சேதப்படுத்தப்பட்ட சூழலைக் காண்கின்றோம். போருக்குப் பின்னரான மக்கள் சமூக நலன் மீட்டெடுப்பு என்பது நிகழ்கின்ற இதே வேளையில் தமிழர் மரபுரிமை பாதுகாப்பு என்ற கருத்தியலைப் புறந்தள்ளிவிடாது, அதற்குத் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.

இலங்கையில் பௌத்தம் தமிழர்களுக்கு அந்நியப்பட்ட ஒரு சமயமல்ல. சிங்கள மொழி இலங்கையில் உருபெறுவதற்கு முன்னரே தமிழ் மக்கள் வழக்கில் இருந்த பண்பாட்டு அம்சங்களுள் பௌத்தத்திற்கு முக்கிய இடம் இருக்கின்றது என்பதை நினைவு கூற வேண்டியுள்ளது. இன்றைய சூழலில், மத ரீதியான பார்வை, சாதி ரீதியான பார்வை என்ற குறுகிய வட்டங்களை ஒதுக்கி விட்டு, பண்டைய இலங்கைத் தமிழர் வரலாற்றுப் பின்புலத்தை ஆராய வேண்டியதும், தெளிவுடன் பண்பாட்டுக் கூறுகளை அணுக வேண்டியதுமான அவசியம் உள்ளது.

இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுதும் வாழும் நூற்றாண்டு இது. உலகத் தமிழர்களாக அனைவரும் இணைந்து இலங்கைத் தமிழர் மரபுரிமை பாதுகாப்பிற்கும் ஆவணப்படுத்தல் தொடர்பான முயற்சிக்கும் இணைந்து செயல்படுவோம்.

உலக மக்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துகள்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

You may also like