மின்தமிழ்மேடை: காட்சி 15 [அக்டோபர் 2018]
https://books.google.com/books?id=gQ9zDwAAQBAJ
தலையங்கம்:
ஐரோப்பாவில் பாதுகாக்கப்படும் தமிழ்மரபுச் செல்வங்கள்
வணக்கம்.
1999ம் ஆண்டு ஜூலை மாதம் எனது முதுகலைப் பட்ட ஆய்வின் போது ஜெர்மனியின் எஸ்லிங்கன் பல்கலைக்கழகத்தில் கோடை விடுமுறை காலத்தில் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்ய, சில அயலக மாணவர்கள் செக் நாட்டின் தலைநகரமான ப்ராக் நகருக்குச் சென்றிருந்தோம். அங்கே பிரமாண்டமான கட்டிடங்களையும் சிற்பங்களையும் பார்த்து வரும் வேளையில் ஒரு அருங்காட்சியகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் அமைந்தது. அங்குக் கண்ணாடி அலமாரிகளுக்குள் சிவப்பும் கருப்புமான மை எழுத்துக்களில் எழுதப்பட்ட தோலினால் செய்யப்பட்ட அட்டைப்பகுதியைக் கொண்ட பைபிள் பிரதி ஒன்றினை நான் பார்க்க நேரிட்டது. அதன் காலம் கி.பி. 12 என அறிந்து கொண்டேன். இப்படி பழமையான தமிழ் ஆவணங்கள் இருக்கின்றனவா என எனக்குள் ஆரம்பித்த தேடல் முயற்சி எனக்குப் பல சிறந்த அனுபவங்களை இன்று வரை அளித்துக் கொண்டிருக்கின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நண்பர் அளித்த நூல் எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. German Indology என்பது நூலின் பெயர். இதனை முனைவர்.சு.மோகனவேலு என்ற ஆராய்ச்சியாளர் எழுதினார் என்றும் அவர் சில காலங்கள் ஜெர்மனிக்கு வந்து தங்கியிருந்து ஆவணங்களை ஆராய்ந்து இந்த நூலை எழுதினார் என்றும் அறிந்து கொண்டேன். நூலை வாசிக்கத் தொடங்கியபோது அந்நூல் குறிப்பிடும் செய்திகளை வாசித்து வியந்தேன்.
ஜெர்மனியில் தமிழ் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அவை ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் பழமையானவை என்றும், இம்முயற்சிகளில் ஈடுபட்டோர் ஒருவரல்ல; மாறாகப் பலர் என்றும் அறிந்து கொண்டதில் வியப்பு மேலும் அதிகரித்தது.
இதன் தொடர்ச்சியாக, அலுவலக நேரமும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏனைய பல பணிகள் போகவும் கிடைத்த நேரங்களில் ஐரோப்பியத் தமிழ் தொடர்புகள் பற்றி தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகள் தேடலின் பயனாக, எங்கெங்கு இத்தமிழ் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்ற தகவல்களைத் தொகுக்கத் தொடங்கினேன். அதன் பயனாக இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகம், பாரீஸ் நகரிலுள்ள பிரான்சு தேசிய நூலகம், கோப்பன்ஹாகனிலுள்ள அரச நூலகம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று சில குறிப்பிடத்தக்க தமிழ் ஓலைச்சுவடிகளையும் காகித ஆவணங்களையும் பார்த்து வரும் வாய்ப்பினை அமைத்துக் கொண்டதில் தமிழ் மரபு அறக்கட்டளை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ் ஓலைச்சுவடிகளையும் காகித ஆவணங்களையும் மின்னாக்கம் செய்து இவற்றிற்கான கணிம பாதுகாப்பினைச் சாத்தியப்படுத்தினோம். இதில் முத்தாய்ப்பாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை ஜெர்மனியின் கிழக்குப்பகுதி நகரமான ஹாலே நகருக்கு நான் சென்று அங்கு ஃப்ராங்கெ கல்வி நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வு அமைகின்றது.
சீர்திருத்தக் கிருத்துவம் எனும் தத்துவக் கோட்பாட்டின் தாயகம் ஜெர்மனி. ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரமான விட்டன்பெர்க் நகரத்தில் கி.பி.16ம் நூற்றாண்டில் பேராசிரியர். டாக்டர். மார்ட்டின் லூதர் உருவாக்கிய கருத்தாக்கம் பின்னர் படிப்படியாக துரித வளர்ச்சியை அடுத்த நூற்றாண்டிலேயே சந்தித்து தனி ஒரு மதமாக ஜெர்மனியில் நிலைபெற்றதோடு ஸ்கேண்டிநேவிய நாடுகளிலும் கிளைவிட்டது. அச்சமயத்தில் இப்புதிய சமயக் கோட்பாட்டிற்கான சமய ஆசிரியர்களை உருவாக்கும் பணியை ஜெர்மனியின் ஹாலே நகரில் அமைந்திருக்கும் ஃப்ராங்கே கல்விக்கூடம் ஏற்றது. இங்குக் கல்வி கற்று தயாரான பாதிரிமார்கள் உள்ளூரிலும் ஐரோப்பாவெங்கினும் மற்றும் உலகநாடுகள் பலவற்றிற்கும் மறைபரப்பும் பணியாளர்களாகச் சென்றனர். அப்படிச் சென்றவர்களில் சிலர் தமிழகம் சென்று அங்குச் செயல்படுத்திய சமூக நிகழ்வுகள் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெறவேண்டியவை; ஆனால் பெரிதாக பேசப்படாதவை.
இந்த ஆய்வுகளை முன்னெடுக்கும் முகமாகத் தமிழ் மரபு அறக்கட்டளை கி.பி.18ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் கி.பி.20ம் நூற்றாண்டு வரை தமிழகத்திற்குச் சென்று பணியாற்றிய ஐரோப்பிய பாதிரிமார்களின் ஆவணப்பதிவுகளை மின்னாக்கம் செய்தும், ஆய்வு செய்தும் அவை குறிப்பிடுகின்ற செய்திகளைத் தமிழ் ஆய்வுலகில் வெளியிடும் பணியினை தொடங்கினோம். அதன் ஒரு மைல்கல்லாக அமைவது இந்த ஹாலே ஃப்ராங்கே கல்வி நிறுவனத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளையின் அண்மைய பயணமும் அதில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளுமாகும்.
ஹாலே ஃப்ராங்கே கல்வி நிறுவனத்தின் பாதுகாப்பில் உள்ள சுவடிகளில் முப்பது ஓலைச்சுவடிகளும் ஏறக்குறைய இருபது கையெழுத்து ஆவணங்களும் இந்த அண்மைய முயற்சியின் போது ஆராயப்பட்டன. இவை அனைத்தும் மூல ஆவணங்கள் என்பது இதன் தனிச் சிறப்பாகும். இவை கூறும் செய்திகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகளாக ஆய்வுக்கட்டுரைகளாக வெளிவரும். இதுமட்டுமன்றி ஐரோப்பாவின் ஏனைய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள ஆவணங்களைப் பற்றிய தொடர் ஆய்விலும் தமிழ் மரபு அறக்கட்டளை ஈடுபட்டுத் தொடர்ந்து பயணிக்கும்.
இணைந்து வாருங்கள்!
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி