Thursday, March 28, 2024
Home மின்தமிழ்மேடை வெளியீடு மின்தமிழ்மேடை: காட்சி 12 [ஜனவரி 2018]

மின்தமிழ்மேடை: காட்சி 12 [ஜனவரி 2018]

by THFiadmin
0 comment
மின்தமிழ்மேடை: காட்சி 12 [ஜனவரி 2018]
https://books.google.com/books?id=9rxHDwAAQBAJ

மின்தமிழ்மேடை: காட்சி 12 [ஜனவரி 2018]
https://books.google.com/books?id=9rxHDwAAQBAJ

தலையங்கம்:
நெய்தல் நிலத்தில் தொடரும் வாழ்க்கை போராட்டங்கள்

வணக்கம்.

2017ன் இறுதி வாரங்கள் தமிழ் மக்களைப் பெறும் துயரத்தில் வீழ்த்திய வாரங்களாகக் கழிந்தன. இயற்கை சீற்றத்தால் மின்சாரம் இல்லாமலும், குடிநீர் இல்லாமலும் ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தின் குமரிமாவட்ட மக்கள் துன்பத்தில் வாடினர். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தங்கள் குடும்பத்தினர் என்று வருவர், திரும்பி வருவார்களா வரமாட்டார்களா, என்ற அச்சத்தோடு துடித்தனர் இம்மக்கள். இவர்களின் அச்சம் நிரந்தரமானது என்பதைப் பறைசாற்றுவதாக மீட்புப் படையினரும் பலனின்றி திரும்பிய சோகம் தான் நிகழ்ந்துள்ளது. ஓகிப் புயல் இம்மக்களை மிக மோசமாகப் பாதித்ததும், நூற்றுக் கணக்கானவர்கள் இன்று வரை காணாமல் போயிருப்பதும், திரும்பி வராதவர்களை இறந்தவர்களாக அறிவித்து கடல் நீரிலேயே தர்ப்பணம் செய்ததும் அண்மைக் கால அழிக்க முடியாத சோகங்கள்.

பன்னெடுங்காலமாகத் தமிழ்ப் பண்பாட்டில் நெய்தல் நிலத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்காலத்தில் நெய்தல் நில மக்களைப் பற்றின புரிதலும் அறிதலும் மற்ற நில மக்களுக்கு மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழகத்தின் வணிகப்பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடல்வழித்தடங்களைக் கண்டுபிடித்து உலகம் முழுமையும் கொண்டு போய் சேர்த்த பெருமை நெய்தல் நில மக்களுக்கே உள்ள தனிச்சிறப்பு.

நெய்தல் நில மக்கள் இல்லாமல் போயிருந்தால் தமிழகப் பண்பாட்டு விழுமியங்கள் உலகின் பல பாகங்களுக்குப் போய் சேர்ந்திருக்காது என்பது நிதர்சனமான உண்மை. காலங்கள் மாறி சமூக பொருளாத அமைப்புகள் மாறிய சூழலில், கடல் உணவுப் பொருட்களை பிடிப்பவர்களாகவும், முத்துக்குளிப்பவர்களாகவும், உப்பு காய்ச்சுபவர்களாகவும் இறுதியாகக் கடலோடிகளாகவும் நெய்தல் நில மக்கள் இன்று இருக்கின்றனர்.

தற்போது கடலோடி தொழில் முற்றிலுமாக நெய்தல் நில மக்களிடமிருந்து மறைந்து போய் விட்டது எனலாம். ஆழ்கடல், மற்றும் கரையோர மீன் பிடி தொழிலைத் தவிர மற்ற கடல் சார்ந்த தொழில்கள் தமிழகக் கடலோரங்களில் சிதறிய வகையில் சிறு சிறு கிராமத்து குழுக்களின் தொழிலாக இருந்து வருகின்றது. இந்த வீழ்ச்சியின் காரணமாக வெளி உலகத்துத் தொடர்புகள் குறைந்து போய் இம்மக்களின் மீதான பாராமுகம் அதிகரித்துள்ளது.

இயற்கை சீற்றங்களான ஆழிப்பேரலைகள், புயல்கள் பெருமழை சீற்றங்கள் ஆகியவற்றினால் உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படுகின்ற மக்கள் இம்மக்களே.

2017ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடவில்லை இக்கடலோர மக்கள். பிறந்த புத்தாண்டும் இம்மக்களுக்கு வெளிச்சம் காட்டுமா என்பது கேள்வியே. தமிழகக் கடலோர மக்களின் நலனை எண்ணிப் பார்த்து நம் ஒவ்வொருவராலும் இயன்ற ஏதாவது ஒரு நற்பணியை இம்மக்களுக்கு நாம் செய்ய வேண்டும் என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இக்காலாண்டிதழை ஓகிப் புயலால் பாதிக்கப்பட்டு வாடும் அனைத்துத் தமிழக கடற்கரையோர மக்களையும் நினைவு கூறும் வகையில் அவர்களுக்காக அர்ப்பணிக்கின்றோம்!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி

You may also like