மின்தமிழ்மேடை: காட்சி 6 [ஜூலை 2016]
https://books.google.com/books?id=v7qhDgAAQBAJ
தலையங்கம்:
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
தமிழர்கள் பெருவாரியாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், கோடைக்காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது போல தமிழ் மொழி சார்ந்த கருத்தரங்க நிகழ்வுகளும் ஆய்வு நிகழ்வுகளும் நடந்த வண்ணமிருக்கின்றன.
கடந்த மூன்று மாதங்களில் நான் கலந்து கொண்ட விழாக்களாக மூன்றினை குறிப்பிட விரும்புகின்றேன். ஜெர்மனியில் எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் விழா,டோர்ட்முண்ட் நகரில் நடைபெற்ற திருக்குறள் ஆய்வரங்கம், வட அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ப்பேரவையின் 29வது ஆண்டு விழா, ஆகியனவே இவை மூன்றும்.
கண்டங்கள் மாறுபடினும், இந்த மூன்று நிகழ்வுகளின் அளவு அமைப்பு ஆகியன மாறுபடினும், இவற்றின் அடிநாதமாக ஒலிக்கும் இரண்டு கூறுகளை நான் அவதானிக்கின்றேன்.
முதலாவது, வளரும் தலைமுறையினருக்கு தமிழ் மொழியைச் சரியான முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம். அடுத்தது, தமிழ் மொழி யுடன் பாரம்பரிய இசை, கலை, வாழ்வியல் கூறுகளை தமிழர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாட்டில் மறந்து மறைந்து விடாமல் தக்க வைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள்.
தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற நாடுகளான தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கை ஆகிய நாடுகளில் ஒரு தமிழ் நிகழ்வை ஏற்பாடு செய்வதை விட புலம்பெயர்ந்த நாடுகளில் அவ்வாறு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் என்பன அதிகமே. பொருளாதார அடிப்படை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனை தான். அதுமட்டுமின்றி, தமிழ் மக்கள் பற்பல தூரப் பகுதிகளிலிருந்து வந்து தங்கியிருந்து நிகழ்வில் கலந்து கொண்டு செல்வது என்பதும் ஒரு சிக்கல் தான்.
இவை முக்கியப் பிரச்சனைகள் தாம் என்றாலும், இவற்றைச் சமாளித்து அயலகத்திலும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி காண முடியும் என்று நிரூபித்திருக்கின்றன இங்கு நான் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள். இவற்றின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது இச்சங்கங்களின் ஏற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்புத்தன்மையும், தீவிர தமிழ்ப்பற்றும் தான் என்பது கூடுதல் புகழ்ச்சி அல்ல!
தாயகத்தில் மட்டுமல்லாமல், அயல் நாடுகளிலும் கூட பொதுவாகத் தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது நம் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கோ, ஆய்வுக் கருத்தரங்குகளுக்கோ, அல்லது மொழி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கோ தங்கள் ஈடுபாட்டை வெளிக்காட்டுவதில்லை, வந்து கலந்து கொண்டு ஊக்குவிப்பதில்லை என்பதே. இது மறுக்கப்பட முடியாத உண்மை. நான் தமிழன் என உணர்ச்சி பொங்க கூக்குரலிட்டு தமிழ்ப்பற்றை வெளிக்காட்ட நினைப்பதில் ஆர்வம் காட்டுவோர் கூட, நிறைவான தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளைப் புறம் தள்ளி ஒதுக்கிச் செல்வதுதான் யதார்த்தமாக இருக்கின்றது. பெரிய அளவில் தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் தமிழ்த்திரைப்படப் பிரபலங்களை வரவழைக்க வேண்டிய நிர்பந்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அமைந்து விடுகின்றது. பொது மக்களின் ஆர்வம் என்பது கலைகளில், அதிலும் குறிப்பாக திரைப்படம் தொடர்பான அம்சங்களில் தான் அதிகமாக இருக்கின்றது. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குமுன் பெற்றோர்கள் தரும் சர்க்கரைபோல, இப்படி தமிழ் விழாக்களுக்குப் பொது மக்களைக் கவர்ந்திழுக்க திரைப்பட பிரபலங்கள் தமிழ் நிகழ்ச்சிகளில் தரிசனம் தருவதும் நிகழ்கின்றது. ஆக, ஏதோ ஒரு வகையில் பல சாமர்த்தியங்களையும் உத்திகளையும் கையாண்டு தான் அயல் நாடுகளில் தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை ஆர்வமுள்ளோர் நடத்தி வருகின்றனர்.
தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் இப்படி தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தமிழ் மொழியும் பண்பாடும் சார்ந்த நிகழ்வுகளுக்கு அர்ப்பணிக்கும் ஒவ்வொரு தமிழ்த்தொண்டரையும் போற்ற வேண்டியதும் நம் கடமை. அத்தகையோரின் சேவைகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை நினைத்துப் பார்ப்பது பெருமை கொள்கின்றது.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி