மின்தமிழ்மேடை: காட்சி 5 [ஏப்ரல் 2016]
https://books.google.com/books?id=R7ehDgAAQBAJ
தலையங்கம்:
தமிழ் வளம்
தமிழ் மொழியின் தொண்மையையும் அதன் பரப்பையும் அதன் ஆளுமையையும், இது தான், என வரையறுத்துக் கூற முடியாத வகையில் நித்தம் பல புதிய செய்திகளை நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பற்றி அறிந்து வியக்கின்றோம். ஏனைய சில உலகமொழிகள் போல, மொழி என்பது ஒரு தொடர்பு சாதனம் மட்டுமே என்ற எல்லையைக் கடந்தும், வர்த்தக மொழி என்ற குறிப்பிட்ட வட்டத்திற்குள் அமைந்த குறியீடுகளையும் தாண்டி மனித குலத்தின் எல்லா மன அதிர்வுகளையும் பதியும் தன்மைக் கொண்ட ஒரு மொழியாக தமிழ் மொழி இருப்பது மாபெரும் சிறப்பு.
பண்பாடு, வாழ்வியல், வணிகம், புவியியல், அரசியல், கலை, வானியல், அறிவியல், தத்துவம் என்ற மனித வாழ்க்கையின் பன்முகத் தன்மைகள் அனைத்தினையும் வெளிப்படுத்தக்கூடிய பலம்பொருந்திய கருவியாக தமிழ் மொழி விளங்குகின்றது. அகம் புறம் என இருவேறாகப் பிரித்து மனித வாழ்வினை அலசும் வளத்தை தமிழ் மொழி தன்னிடத்தே கொண்டுள்ளது. தமிழ் பேச்சு மொழியின் தொண்மை என்பதை இன்றளவும் ஆய்வாளர்கள் வரையறுக்க முடியவில்லை. தமிழ் வரிவடிவத்தின் தொண்மையை கணக்கிடும் தொல்லியலாளர்கள் இக்கால தமிழுக்கும் முந்தியதான வட்டெடுத்துக்கள், அந்த வட்டெழுத்துக்களின் மூல வரிவடவமான தமிழி எழுத்தின் தொண்மைகளை, கல்வெட்டு ஆதாரங்களின் வழி நிலை நிறுத்த தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சிகளின் பலனாக தமிழ் எழுத்துருக்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் பல நமக்குக் கிடைத்திருப்பதும் தொடர்ந்து கிடைத்து வருவதும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் மொழியின் தொண்மை, ஆளுமை தொடர்பான கூறுகளை நிலை நிறுத்த மிக உதவி இருக்கின்றன. இந்த வகை ஆய்வுகள் மேலும் மேலும் விரிவாக தமிழக நிலைப்பரப்பு மட்டுமன்றி இந்தியா முழுமைக்கும் என்பதோடு நின்றுவிடாமல், கிழக்காசிய நாடுகளிலும் தூரக்கிழக்காசிய நாடுகளிலும் நிகழ்த்தப்பட வேண்டும். இது மேலும் தமிழ் மொழியின் விரிந்த பயன்பாட்டையும் தமிழர் தம் கடல் வழி ஆளுமையையும் ஆய்வுலகம் அறிந்து கொள்ள அடிப்படையை வகுத்துக் கொடுக்கும்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோர் பலர்.
சங்கம் என்ற சொல் பௌத்த சமயத்தின் தாக்கம் என்று கற்றோர் கூறுவர். அறிவுத்தேடலை நிகழ்த்தும் களமாக சங்கம் அமைந்திருந்தது.
தமிழ் வளர்த்த சங்கங்கள் பல.
அந்த வரிசையில் கரந்தை தமிழ்ச்சங்கம் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கும் அமைப்பாகத் திகழ்கின்றது.
1914ம் ஆண்டில் ஐவர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் மொழியின் வரலாறு பற்றிய ஆய்வினை மேற்கொண்டு வெளியிடும் முயற்சி தொடங்கப்பட்டது. 1919ம் ஆண்டில் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் முயற்சியில் தொடங்கவிருந்த தமிழ் இதழுக்கு தமிழ்ப்பொழில் என்ற பெயர் சூட்டப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் சில தடங்கல்களால் தடை ஏற்பட்டாலும் 1925ம் ஆண்டில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப்பொழில் முதல் இதழ் வெளியீடு கண்டது.
18925ம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக 52 ஆண்டுகள் தமிழ்ப்பொழில் இதழ் வெளியிடப்பட்டது. அந்த சஞ்சிகளை அனைத்தையும் கரந்தைத்தமிழ்ச்சங்கத்தின் விருப்பத்திற்க்கிணங்க திரு பொள்ளாச்சி நசன் அவர்கள் மின்னூலாக செய்து கொடுத்திருந்தார்கள். அந்த மின் இதழ்களை ஒவ்வொன்றாக தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இணைத்து வெளியிடும் பணியை இவ்வாண்டு மார்ச் மாதம் 23ம் திகதி முதல் தொடங்கி உள்ளோம். இது ஒரு மாபெரும் பணி. தமிழறிஞர்கள் பண்டிதர் உலகநாதப்பிள்ளை, சதாசிவப் பண்டாரத்தார், பண்டிதர் மு.வேங்கடசாமி நாட்டார், னடேசப்பிள்ளை, மு. கோவிந்தராச நாட்டார், R. வேங்கடாசலம் பிள்ளை, மறைமலை அடிகள், ஆ. பூவராகம் பிள்ளை , இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை, பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை, வ. பழ. சா. சாமிநாதன் செட்டியார், B. S. இரத்தினவேலு முதலியார், வே. முத்துசாமி ஐயர், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், மு. இராகவையங்கார், மு. வே. மா. வீ. உலகவூழியன், சாமி. சிதம்பரன், திரு. சோமசுந்தர தேசிகன், ஒளவை சு. துரைசாமி பிள்ளை போன்ற 20ம் நூற்றாண்டுஆளுமைகளின் ஆய்வுப் படைப்புக்களைத் தாங்கி இந்தசஞ்சிகைகள் தரத்துடன் மிளிர்கின்றன.
இந்த மாபெரும் ஆய்வுப் பொக்கிஷங்கள் அடங்கிய மின்னிதழ்கள் உலக மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமிதம் கொள்கின்றோம்.
மதுரை நகரில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி பல தமிழ் அறிஞர்களின் ஆய்வுகளை ஊக்குவித்தவர் இராமநாதபுர மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர். அவரது பிறந்த நாள் மார்ச் 21ம் நாள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. அதனை இந்த காலாண்டு வெளியீட்டில் நினைவு கூறுதல் தகும் என்றே கருதுகின்றேன்.
இந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழ்த்துறையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்சுள்ளோம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த வகையில் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் ஆய்வுகளில் ஈடுபடும் னடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனை முக்கியப்பொறுப்பெடுத்துக் கொண்டு ஏற்பாடுகளைச் செய்த முனைவர்.வீரமணி அவர்களை இத்தருணத்தில் பாராட்டுதல் தகும்.
தமிழின் வளத்திற்கு சிறப்பு கவனத்தை வழங்கும் இதழாக இந்தக் காலாண்டிதழ் திகழ்கின்றது.
தமிழ் மொழி தொடர்பாக செய்யப்பட வேண்டிய காத்திரமான ஆய்வுத்துறைகள் பல இருக்கின்றன. தமிழ் மாணவர்களாகிய நாம் எல்லோருமே தரமான சிறந்த முறையிலான ஆய்வுகளை தமிழ் மொழி தொர்பாக தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருத்தல் மிக அவசியம். தமிழக அரசும், கல்விக் கூடங்களும் தமிழ் மொழி வளர்ச்சியில் விரிவான வகையிலான சீரிய பங்கை ஆற்ற வேண்டியது முக்கியக் கடமை என்பதை குறிப்பிடுதல் அவசியம் என்று கருதுகின்றேன்.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி