Saturday, October 5, 2024
Home மின்தமிழ்மேடை வெளியீடு மின்தமிழ்மேடை: காட்சி 4 [ஜனவரி 2016]

மின்தமிழ்மேடை: காட்சி 4 [ஜனவரி 2016]

by THFiadmin
0 comment
மின்தமிழ்மேடை: காட்சி 4 [ஜனவரி 2016]
https://books.google.com/books?id=iLShDgAAQBAJ

மின்தமிழ்மேடை: காட்சி 4 [ஜனவரி 2016]
https://books.google.com/books?id=iLShDgAAQBAJ

தலையங்கம்:
வேளாண்மையும் நீர் வள மேலாண்மையும்

இயற்கை வேளாண்மை; மனித குலத்தின் நாகரிகம் என்பதை நிர்ணயிக்கும் அளவுகோளாக விவசாயத்தின் தோற்றம் அமைகின்றது. தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் திறனை வளர்த்துக் கொண்ட பின்னர் ஓரிடத்தில் மனித இனக்குழு தங்கி அங்கேயே குடில்களை அமைத்து குடும்பங்களை உருவாக்கும் வழக்கம் உருவாகியது என்பர் மானுடவியல் ஆய்வாளர்கள். உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களாகக் கருதக்கூடிய மெஸபொட்டாமியன் நாகரிகம், சிந்து வெளி நாகரிகம், எகிப்திய பண்டைய நாகரிகம் ஆகியவற்றை நோக்கும் போது அவை நீர்நிலைகளுக்கு அருகாமையில் அமைந்திருந்தமையும் அங்கெல்லாம் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள் நிகழ்ந்தன என்பதையும் கிடைத்திருக்கின்ற அகழ்வாராய்ச்சிக் குறிப்புக்களிலிருந்து அறிகின்றோம்.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் அதன் நிலப்பகுதி, பருவகால சூழ்நிலைக்கேற்ப பயிரிடப்படும் தாவர வகைகளும் பயிர்களும் மரங்களும் வித்தியாசப்படுகின்றன. இயற்கை ஒரு பேரதிசயம். பற்பல தாவர வகைகளை நமக்களித்து மனித இனமும் விலங்கினங்களும் உயிர் வாழ வழி அமைத்துக் கொடுத்துள்ளது இவ்வுலகின் இயற்கை.

விவசாயம் எனும் போது அதில் அடங்கக்கூடிய முக்கிய நடவடிக்கைகளான, நீர்ப்பாசன தயாரிப்பு, பயிர் சுழற்சி, பயிர்கள் செழித்து வளரத் தேவைப்படும் உரம், பயிர்கள் பூச்சிகளினாலும் சிறு விலங்குகளினாலும் சேதப்படாமல் பாதுகாக்கத் தேவைப்படும் பூச்சுக் கொல்லி மருந்துகள், பயிர்கள் அறுவடை, தானியங்கள் பாதுகாப்பு, விற்பனை எனப் பல அம்சங்கள் அடங்கியுள்ளன. தற்கால விவசாய போக்கினை உற்று நோக்கும் போது அதிக விளைச்சல், துரித விளைச்சல் என்ற ஒரு காரணத்தை முன் வைத்துப் பல ரசாயனப் பொருட்களை விவசாயத்தில் பயன்படுத்தும் போக்கு இருப்பதைக் காண்கின்றோம். பெரிய அளவில் நடக்கின்ற விவசாயங்கள் என்று மட்டுமல்லாது வீட்டிலே பயிர்களையும் பூச்செடிகளையும் வளர்ப்பவர்களும் கூட மிக எளிதில் பல ரசாயனப் பொருட்களைப் பயிர்கள் செழித்து வளர வேண்டும், நிறையப் பூக்களும் காய்களும் பழங்களும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்துகின்றனர்.

இரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரம் தயாரித்தல் என்பதில் பொதுமக்கள் நாம் எல்லோருமே கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றான தாகின்றது. அதே போல, பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து இயற்கை வழியில் தாவரங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் விவசாயத்தில் ஈடுபடுவோர் கவனம் செலுத்த வேண்டியதும் மிக அவசியம். ரசாயனப் பொருட்கள் விவசாய நிலங்களில் சேரும் போது, அந்நிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் விளைச்சல் பொருட்களை உணவாக ஏற்று உண்ணும் நமக்கு, அவை உடலுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் நிலை ஏற்படுகின்றது என்பது புரிவதில்லை.

மண் வளத்தைப் பாதுகாக்க இயற்கை உரம் தயாரித்தல் எனும் கலையை வீட்டில் பயிர்கள் வளர்ப்பவர்களும் சரி, பெரிய அளவில் விளைச்சல்களைச் செய்வோரும் சரி, நடைமுறையில் சாத்தியப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். வீட்டில் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளின் கழிவுகளையும் வேளாண் கழிவுகளையும் முறையாகப் பதப்படுத்தி இயற்கைக்கு நன்மை சேர்க்கும் வகையில் அவற்றை உரமாக்கிப் பயன்படுத்தலாம். ‘அவசர உலகத்தில் இதெல்லாம் சாத்தியமா.. பணம் கொடுத்தால் உரம் கிடைக்கின்றதே’ என நினைத்துச் செயல்படும் போது அதிகப்படியான இரசாயனப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பவர்களில் ஒருவராகவே நாம் மாறிவிடுகின்றோம். நாம் வாழ்கின்ற இந்தப் பூமியில் விவசாய பூமி நமக்குத் தாய் போன்றது. அதன் உடலைக் காயப்படுத்தும் ரசாயனப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க ஒவ்வொருவரும் முயற்சி எடுப்போம்!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி

You may also like