Wednesday, April 24, 2024
Home மின்தமிழ்மேடை வெளியீடு மின்தமிழ்மேடை: காட்சி 3 [அக்டோபர் 2015]

மின்தமிழ்மேடை: காட்சி 3 [அக்டோபர் 2015]

by THFiadmin
0 comment
மின்தமிழ்மேடை: காட்சி 3 [அக்டோபர் 2015]
https://books.google.com/books?id=p7KhDgAAQBAJ

மின்தமிழ்மேடை: காட்சி 3 [அக்டோபர் 2015]
https://books.google.com/books?id=p7KhDgAAQBAJ

தலையங்கம்:
“தமிழக கல்வெட்டுக்கள்”

​கல்லில் எழுதுதல்… அது எல்லோருக்கும் உடன் சாத்தியப்படும் ஒரு எளிமையான விடயமா? நிச்சயமாக இல்லை!

கல்லில் எழுத்துக்களைச் செதுக்கி ஒரு கல்வெட்டினை உருவாக்குவது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்ததொரு கலை!

உலகில் கல்லில் சொற்களைச் செதுக்கி அரச ஆவணங்களையும் வரலாற்றுச் செய்திகளையும் பதிப்பித்த இனங்கள் என்றால் அது எகிப்திய பண்டைய நாகரிகத்தினை அமைத்த அச்சமூகத்தையும், இந்தியாவில் இருக்கும் சமூகத்தையும் சுட்டுவதாகத்தான் இருக்க முடியும். எகிப்திய ஹீரோக்லிப்ஸ் எழுத்துக்கள் உருவங்களைக் கொண்டு சொல் அமைப்பை வடிவமைக்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் கிடைக்கின்ற கல்வெட்டுக்களோ வரிவடிவ எழுத்துக்களின் தொகுதிகள் சொற்களாக அமைந்து, அவை வாக்கியமாக விரிந்து, ஒரு குறிப்பிட்ட செய்தியை மிக விரிவாக வழங்குகின்ற தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன.

கல்வெட்டுக்களாகச் செய்திகள் பதிக்கப்படுவதை நான்கு வகையாகப் பிரிக்கலாம்:

  • ஆரம்பக்கால கல்வெட்டுக்களாக அமைந்த ஓரிரு வரிகள் கொண்ட வாக்கியத்தினால் அமைந்தவை
  • ஒரு நடுகல்லில் குறிப்புக்களாகச் சில தகவல்கள் வழங்கப்படும் வகை
  • ஒரு ஆலயத்தின் தனிப்பகுதிகளில் சில வரிகளில் கல்வெட்டுச் செய்திகள் செதுக்கப்பட்டிருக்கும் வகையில் அமைந்தவை
  • ஒரு ஆலயத்தின் சுவரின் பெரும் பகுதியிலோ அல்லது முழுப் பகுதியிலோ நூலில் உள்ள பக்கங்களைப் போல கொத்து கொத்தாகச் சொற்குவியல்கள் குவிந்த வகையில் நீண்ட வாக்கியங்களில் செதுக்கப்பட்ட வரலாற்றுச் செய்திகளாக அமைந்தவை

இன்றைய தமிழக நிலப்பரப்பில் கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில் தொன்மையான தமிழ் எழுத்து கி.மு.5ம் நூற்றாண்டிலிருந்து வழக்கில் இருந்தது என்பதைப் பானை ஓடுகளிலும், முதுமக்கள் தாழிகளிலும், மலைப்பாறைக்குகைகளிலும் தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட வேறு சில சின்னங்களிலும் காண்கின்றோம். இந்தத் தொன்மையான தமிழ் எழுத்தைத் “தமிழி” எனச் சுட்டுவதையும் வழக்கில் காண்கின்றோம். இதன் தொடர்ச்சியாக கிபி 3ம் நூற்றாண்டு வாக்கில் “வட்டெழுத்து” என்ற எழுத்து வகையில் “தமிழ் எழுத்து” என்ற வகையும் தனித்தனியாக வளர்ச்சியுறத் தொடங்கின. இந்த எழுத்துக்களின் வடிவங்கள் படிப்படியாக மாற்றங்களை உட்புகுத்தி வளர்ச்சியுற்று தனி எழுத்து வகைகளாகப் பரிமாணம் பெற்றன.

கல்வெட்டுக்கள் தமிழ் மொழி வரலாற்றை அறிய உதவும் ஒரு முக்கிய சாதனம் என்ற கருத்தை முன்வைத்தவர் ஆங்கிலேயரான ஜேம்ஸ் பிரின்சப் என்பவர். (கல்லெழுத்துக்கலை, நடன.காசிநாதன்) 1837ம் ஆண்டில் இவர், “வெளிநாட்டார் இந்தியாவில் உள்ள கல்வெட்டுக்களையெல்லாம் திரட்டிப் பிடித்து அறிந்தோமென்றால் இந்தியாவின் பழமையான வரலாற்றை மிகத் தெளிவாக அறியலாம்” என்ற கருத்தை வெளியிட்டார். இது இன்றளவும் உண்மைதான் என்பதை வரலாற்று ஆர்வலர்கள் அறிந்திருக்கின்றனர். தமிழகத்தின் கல்வெட்டுக்கள் தென்னிந்திய நிலப்பரப்பினையும் தாண்டி கிழக்காசிய நாடுகளிலும் தூரக்கிழக்கு ஆசியாவிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதையும் கேள்விப்படுகின்றோம்.

ஆக, தொடர்ச்சியான கல்வெட்டு ஆய்வுகள் என்பவை தமிழக பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள மிக முக்கிய ஆதாரங்களாக அமைகின்றன. இத்தகைய வரலாற்று ஆதாரங்களை அதன் சிறப்பும் முக்கியத்துவமும் அறியாது கோயில் சீரமைப்புப் பணி, கோயில் புதுப்பித்தல், மண்டபம் சீரமைப்பு என்ற பெயரில் அழிக்கப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியதொரு செயலாகும்.

விரிவான வகையில் கல்வெட்டுக்களின் முக்கியத்துவம் பற்றிய செய்திகள் இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய அவசியம் தற்சமயம் இருக்கின்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையத்தின் ஒரு பணியாகவும் இது அமையும். நம் தமிழ் மண்ணின் வரலாற்றை அறிந்த ஒரு சமூகமாக, வரலாற்றுச் சின்னங்களின் அருமை பெருமைகளை உணர்ந்த சமூகமாக நாம் திகழ முயற்சிப்போம்!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி

You may also like