Saturday, October 5, 2024
Home மின்தமிழ்மேடை வெளியீடு மின்தமிழ்மேடை: காட்சி 1 [ஏப்ரல் 2015]

மின்தமிழ்மேடை: காட்சி 1 [ஏப்ரல் 2015]

by THFiadmin
0 comment
மின்தமிழ்மேடை: காட்சி 1 [ஏப்ரல் 2015]
https://books.google.com/books?id=obChDgAAQBAJ

மின்தமிழ்மேடை: காட்சி 1 [ஏப்ரல் 2015]
https://books.google.com/books?id=obChDgAAQBAJ

தலையங்கம்:
தென்னாப்பிரிக்க தமிழர்களின் தமிழ் தாகம்!!

இன்று நாம் பரவலாக அறியும் தென்னாப்பிரிக்க தமிழர்களின் வரலாறு 1860ம் ஆண்டில் தொடங்குகின்றது. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் (Natal) பகுதியில் தமிழ் மக்களின் குடியேற்றம் என்பது நாட்டல் கரும்புத்தோட்டத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. தென்னாப்பிரிக்காவின் பெரும்பாண்மை இனக்குழுவினராகிய சூலு(Zulu) இனமக்கள் கரும்புத்தோட்டங்களில் பணிபுரிவதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் அங்கு பணிபுரிய அப்போதைய பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு மாற்று மனிதவளத் தேவை என்பது அத்தியாவசியமாகிப் போன சூழலில் அவர்களது பார்வை தென்னிந்தியாவை நோக்கிச் சென்றதன் அடிப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்களைத் தென்னாப்பிரிக்கா கொண்டு செல்லும் முயற்சி தொடங்கியது.

1800ம் ஆண்டு வாக்கில் அமுல் படுத்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் தொடர்பான சட்டம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்களைக் கொண்டு செல்வதை சாத்தியப்படுத்தியிருந்தது. இந்தியாவில் அப்போது நடப்பில் இருந்தது பிரித்தானிய காலணித்துவ ஆட்சி. ஆக, பிரித்தானிய அரசு அப்போதைய இந்திய காலணித்துவ அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தென்னாப்பிரிக்கக் காடுகளை வெட்டி கரும்புத்தோட்டம் உருவாக்க தென்னிந்தியாவிலிருந்து தொழிளாளர்களைக் கொண்டு செல்வது என முயற்சி மேற்கொண்டது.

இந்தியாவின் வளங்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்வது என்பதை அப்போதைய காலணித்துவ அரசு நடைமுறைப்படுத்தியிருந்தது. இங்கிலாந்தின் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய காலணித்துவ நாடுகளின் வளங்களே பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டன. பொருட்களை எப்படி தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனரோ அதே போல மனிதர்களையும் தமது பொருளாதார வளத்தினைப் பெருக்க பிரித்தானிய அரசு பயன்படுத்திக் கொண்டது. இதன் அடிப்படையில் தான் பல தொழிலாளர்கள், அதிலும் குறிப்பாக தென்னிந்திய தொழிலாளர்கள் மலாயா, சிங்கை, பர்மா, மொரிஷியஸ், பிஜி தீவுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். இப்படித்தான் தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதிக்கும் தென்னிந்தியர்கள் குடியேற்றம் ஆரம்பித்தது.

1860 ஆண்டு அப்போதைய மட்ராஸிலிருந்து 16 நவம்பர் டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூன்றாண்டுகால ஒப்பந்ததில் கையெழுத்திட்டு தொழிலுக்காக கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மக்கள். இவர்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் தமிழர்கள். இதனை அடுத்து தொடர்ந்து தென்னாப்பிரிக்கா வந்த தமிழ் மக்களில் பலர் திரும்பிச்செல்லாத நிலையில் தென்னாபிரிக்கத் தமிழர்கள் என்ற ஒரு தனி இனமே ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாகியது.

தென்னாப்பிரிக்கத்தமிழர்களின் தமிழ் தாகம் என்பது அளப்பறியது. தங்கள் மொழி என்பது நாளடையில் புழக்கத்தை விட்டு மறைந்து விட்டதை உணர்ந்து தங்கள் மொழியையும், பண்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டும் என்று மிக்க ஆர்வத்துடன் அண்மைய காலத்தில் பல்வேறு முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். தமிழிசையை புறந்தள்ளும் நிலை மாறி பல முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழிசையே ஆக்கிரமிக்கும் நிலையை இங்கு காண்கின்றோம். கோயில்கள், தமிழ் சடங்குகள், தமிழ் வாழ்வியல் முறைகள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டு மென்மேலும் தங்கள் பாரம்பரிய விழுமியங்கள் மறைந்து கால ஓட்டத்தில் நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் இவர்கள் கவனத்துடன் செயல்படுகின்றனர். பல்வேறு தென்னாப்பிரிக்க தமிழ்ச்சங்கங்களும் தமிழ் இயக்கங்களும் செய்யும் சேவைகளை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளையின் தமிழ்ச்சேவையானது அளப்பறியது; குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழி தென்னாப்பிரிக்காவில் காலூன்ற வேண்டுமென்றால் அதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது தகுதியான தமிழ்ப்பாடங்களே; அப்பாடங்களை முறையுடன் நடத்த தகுதி பெற்ற தமிழாசிரியர்கள்; என அடிப்படை தேவையைக் கண்டறிந்து இத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் முயற்சி மேற்கொண்டு தமிழாசிரியர்களுக்கான ஓராண்டு பயிற்சியைச் செய்து முடித்திருக்கின்றது இந்த இயக்கம். இதன் வழி 43 மாணவர்கள் தம்மை தகுதி பெற்ற தமிழாசிரியர்களாக உருவாக்கிக் கொள்ள வழி அமைத்துக் கொடுத்திருக்கின்றது இத்திட்டம். இத்திட்டத்தின் பின்னனியில் இருந்து அதனை இயக்கும் மாபெரும் சக்தியாக விளங்குபவர் திரு. மிக்கி செட்டி அவர்கள். பொருளாதார ஆதரவு, திட்ட அமைப்பு, மாணவர்களுக்கும் அமைப்பிற்கும் ஆதரவு என பல்முனையில் செயல்படும் இவர் ஒரு அசாத்தியமான மனிதர். தென்னாப்பிரிக்கத் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் இவர் என்பது மிகையான கூற்று அல்ல.

மகாத்மா காந்தியடிகள் தன் வாழ்நாளின் 20 ஆண்டு காலங்கள் தென்னாப்பிரிக்காவில் வசித்தவர். மகாத்மா காந்தியடிகளுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்களில் ஒருவராக அறியப்படும் தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாடு தென்னாப்பிரிக்கா. அங்கு அப்போது எவ்வகையில் தமிழ் உணர்வு இருந்ததோ அதில் சிறிதும் குறைவில்லாது, தமிழ் உணர்வே தமிழரின் தன்மானத்திற்கு அடையாளம் என தென்னாப்பிரிக்க தமிழர்கள் தீவிரமாக தமிழ் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரின் ஊக்கமும் நாளுக்கு நாள் பெருக வேண்டும். இவர்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமது இன்றைய நிலை போலல்லாது நன்கு தமிழில் எழுதவும் பேசவும் கற்றவர்களாக வளர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்துகின்றது! –

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி

அட்டைப்படக்குறிப்பு: மகாத்மா காந்தியடிகள் தாம் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த சமயத்தில் தங்கி இருந்த சர்வோதயா இல்லத்தின் முன்பகுதியில் ஒரு அச்சு ஆலையை உருவாக்கி நடத்தி வந்தார். 1903ம் ஆண்டில் தொடக்கப்பட்ட அந்த அச்சு ஆலையின் புகைப்படமே இச்சஞ்சிகையின் அட்டைப்பகுதியை அலங்கறிக்கின்றது.

You may also like