தலையங்கம்: காட்சி 11 [அக்டோபர் 2017]

தொல்லியல் ஆய்வால் நம் தொன்மை அறிவோம்

தமிழகத்திற்கும் உலகின் ஏனைய பாகங்களுக்குமான கடல்வழிப்பயணம் என்பது பன்னெடுங்காலமாகத் தொடர்வது. ஐரோப்பியர்களும் அரேபியர்களும் தான் கடல் வழிப்பாதையை ஆட்சி செய்தவர்கள் என்றும், தமிழர்களுக்குத் தம் நாட்டினை விட்டுத் தூர நாடுகளுக்குச் செல்வது புதிய முயற்சியே, என்ற தவறான சிந்தனையானது, உலகில் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை அறியாதோர் கொண்டிருக்கும் தவறான கருத்தாகும்.

இன்றைக்கு 4,000 ஆண்டு வாக்கில் தென் கிழக்கு நோக்கிச் சென்ற தமிழ்மக்கள் இந்தோனிசியா, பாப்புவா நியுகினி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் தங்கள் தடம் பதித்துள்ளனர். இன்று இப்பகுதிகளில் வாழும் பூர்வ குடி மக்களிடையே நிகழ்த்தப்பட்டு வருகின்ற பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் இவ்வகைப் பயணங்களின் வழி தமிழகத்திலிருந்து கடல்வழியாக இவர்கள் சென்றிருக்கக்கூடும் என்ற அனுமானங்களை உறுதி செய்வனவாக உள்ளன.

தொல்லியல் ஆய்வுகள் தான் தமிழகத்தின் பண்டைய நாகரிகத்தின் வயதினைக் கண்டறிய நமக்கிருக்கும் ஒரே சாதனம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் கடற்கரைப் பகுதிகள் குறிப்பிடத்தக்க துறைமுகப் பகுதிகளைக்கொண்டிருந்தன என்பதைக் காணமுடிகின்றது. தொண்டி, பட்டணம், முசிறி, ​​அரிக்கமேடு, வசவசமுத்திரம், ​மரக்காணம், ​காரைக்காடு/குடிக்காடு, ​காவிரிப்பூம்பட்டினம், ​அழகன்குளம், ​கொற்கை போன்றவை சங்ககாலத்து துறைமுகப் பட்டினங்களாகத் திகழ்ந்தன. ஆனால் கால ஓட்டத்தில் அரசியல் மாறுபாடுகளினால், இயற்கை சீற்றத்தினாலும், சமூக நிலை மாற்றங்களினாலும் இந்தப்பகுதிகள் அதன் சிறப்பையும் வளத்தையும் இழந்து இன்று முக்கியத்துவம் அற்ற பகுதிகளாக மக்களால் அறியப்படும் நிலையைக் காண்கின்றோம்.

ஆயினும் இத்தகை நிலப்பகுதிகளில் சங்க இலக்கியங்கள் காட்டும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், இன்று சாதாரணமாக அப்பகுதியைக் காணும் போது கிடைக்கின்ற பண்டைய தொல்லியல் சின்னங்கள் மற்றும் மக்களின் வாழ்வியல் கூறுகளை உற்று நோக்கும் போதும் அப்பகுதிகள் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட வேண்டிய பகுதியே என்ற சிந்தனை நிச்சயம் ஏற்படும். இப்படி அடையாளப்படுத்தி ஆராய முற்படும் போது தமிழர் நாகரிகத்தின் தொன்மையை அறிந்து கொள்ள உதவும் சான்றுகள் பல கிடைப்பது சாத்தியப்படும்.

கீழடியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் பல தடைகளைக் கடந்து மூன்றாம் கட்டத்தை முடித்துள்ளது. அங்கு இனி ஆய்வு செய்ய ஒன்றுமில்லை என்ற கருத்துக்கு எதிராக மீண்டும் அப்பகுதியில் அகழ்வாய்வு செய்யப்படாமல் விடுபட்டுப் போன பகுதிகளையும் செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அண்மைய காலத்தில் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட மிக முக்கிய அகழ்வாய்வாக அழகன்குளம் ஆய்வு திகழ்கின்றது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளத்தில் இந்த ஆண்டு மே மாதம் அகழ்வாய்வுப் பணியைத் தமிழக தொல்லியல் துறை தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி முடித்துள்ளது. இந்த ஆய்வின் போது 52 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டன என்றும் அதில் சங்ககாலத்து கட்டுமானங்கள் சுடுமண் பாண்டங்கள், தமிழி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள், மணிகள் என ஏறக்குறைய 13,000 தொல்லியல் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன என்பதும் அவை தமிழகத்திற்கும் ரோமானியர்களுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இருந்த வணிகத் தொடர்பினை உணர்த்துவதாகவும் இருக்கின்றன என்பதையும் அறியுக்கூடியதாக இருக்கின்றது.

அழகன்குளத்தில் வெற்றிகரமாக ஆய்வினை நடத்தி முடித்த தமிழக தொல்லியல் துறையே, தேங்கி நிற்கும் கீழடி அகழ்வாய்வுப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலியுறுத்துகின்றது.

தமிழகத்தின் தொன்மையான தத்துவங்களில் ஒன்று சமணம். சமணச் சுவடுகளை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்து அவற்றை ஒரு பிரத்தியேக வலைப்பக்கத்தில் உள்ளீடு செய்து வைக்க வேண்டும் என்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் எண்ணமும் இந்த மாத தொடக்கம் நிறைவேறியது. http://jainism.tamilheritage.org/ என்ற வலைப்பக்கம் இதுவரை நாம் வெளியிட்டுள்ள பதிவுகளையும் கட்டுரைகளையும் உள்ளடக்கிய வகையில் ஆய்வுத்தளத்தில் ஈடுபடுவோருக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடரும் செயல்பாடுகளில் இணைந்து கொள்ளுங்கள். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2019 மின்தமிழ்மேடை | Design by ThemesDNA.com
top