தலையங்கம்: காட்சி 10 [ஜூலை 2017]

தமிழர் மரபுவளத்தை மீட்போம்

தமிழ் மரபு அறக்கட்டளை 2001ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. தொடக்கம் முதல் படிப்படியாகத் தமிழர் வரலாறு, தமிழ் மொழி சார்ந்த ஆய்வு, ஓலைச்சுவடிகள் மற்றும் பழம் நூல்கள் பாதுகாப்பு எனத் தொடர்ந்து பல்வேறு உலகளாவிய தமிழ் நடவடிக்கைகள் இந்த அறக்கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நீண்ட நாட்களாகத் தமிழகத்தின் இஸ்லாமிய விழுமியங்களையும், வரலாற்றுச் செய்திகளையும், ஆவணங்களையும் பதிவு செய்யும் ஒரு முயற்சி தொடக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இருந்து வந்தாலும் அதற்குத் தகுந்த வாய்ப்பும் கால அவகாசமும் அமையப்பெறாமல் இருந்து வந்தது.

தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான வரலாற்று ஆவணப்பதிவு நடவடிக்கைகளில் தமிழக கிராமப்புற சடங்குகள், நாட்டார் தெய்வங்கள், நாட்டார் செவ்வியல் பாடல்கள், சைவ வைஷ்ண ஆலயங்களின் பதிவுகள், சமண வரலாற்றுப் பதிவுகள், கிறித்துவ தேவாலயங்கள் குறித்த பதிவுகள், ஐரோப்பியர்களின் தமிழக வரலாற்று ஆவணங்கள் தொடர்பான ஆய்வு, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், வாய்மொழிப்பதிவுகள், இந்திய வரலாற்றில் ஐரோப்பிய அறிஞர்களின் ஆய்வுப் பங்களிப்புகள் உள்ளிட்ட பரந்து பட்ட வரலாற்றுப் பதிவுகளின் தொடர்ச்சியில், இப்பொழுது தமிழக இஸ்லாமியர்களின் பண்பாட்டுப் பதிவுகளையும் இணைத்துள்ளோம். இந்த முயற்சி தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர்ச்சியான தமிழர் வரலாற்று மின்னாக்க முயற்சிகளில் சிறப்பிடம் பெறுவதாக அமைகின்றது. இந்தச் சிறப்பு வலைப்பக்கத்தினை மே மாதம் தொடங்கினோம். http://thf-islamic-tamil.tamilheritage.org/.

இஸ்லாமிய வரலாற்றுச் சின்னங்கள், ஆவணங்கள் போன்றவற்றின் பங்கு இல்லாமல் தமிழக வரலாற்றுப் பதிவுகளுக்கான முயற்சிகள் முழுமைபெறாது. இந்தியாவில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் அரபு, பர்சியன் கல்வெட்டுக்களும் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய விழுமியங்கள் எனும் போது பள்ளிவாசல்கள், தர்காக்கள், உணவு, வாழ்வியல் சடங்குகள், மொழிவளம் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழில் எழுதப்பட்ட பல இஸ்லாமிய நூல்கள் உள்ளன. பிரித்தானிய நூலகத்தின் ஆசிய நூல்கள் பகுதியில் கிடைக்கின்ற தமிழ் நூல்களில் இஸ்லாமியத் தமிழ் நூல்களும் அடங்கும் என்பதனை பலரும் அறியாது இருக்கலாம். இந்த நூல்களும் மின்னாக்கம் செய்யப்பட்டு அவற்றையும் தமிழ் ஆய்வாளர்களின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே நம் அவா.

கடந்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களின் தென்னிந்திய வருகையின் போது அவர்கள் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்ற அரிய விலைமதிக்க முடியா அரும்பொருட்களில் ஏராளமான தமிழ் நூல்களும் அடங்கும். அப்படிக் கொண்டு செல்லப்பட்ட நூல்கள் ஐரோப்பாவின் சில குறிப்பிடத்தக்க நூலகங்களிலும், ஆர்க்கைவ்களிலும் மிகப் பாதுகாப்பாக இருக்கின்றன. அத்தகைய ஒரு முக்கிய ஆவணப் பாதுகாப்பகம் தான் பாரீசில் இருக்கும் பிரான்ஸ் தேசிய நூலகம். அங்குள்ள நூல்களில் அரியத் தமிழ் நூல்களைப் பார்வையிட சிறப்பு அனுமதி பெற்று பதினைந்து சுவடி நூல்களை மின்னாக்கம் செய்துள்ளோம். தமிழர்கள் எழுதிய பனை ஓலைச்சுவடிகள் என்பதோடு தமிழகம் வந்த பிரஞ்சுக்காரர்கள் அவர்கள் பார்த்த விடயங்களை தாமே தமிழ் கற்று தமிழிலும் பிரஞ்சிலும் எழுதிய நூல்களும் இவற்றுள் அடங்கும்.

ஓலைகளை தீயில் எரித்துக் கொளுத்தியும், ஆற்றில் விட்டு அழித்த தமிழ் மக்களில் சிலரது செயல்பாட்டோடு ஒப்பிடுகையில் தமிழகம் வந்த கிறுத்துவ பாதிரிமார்கள் சிலரது தமிழ் நூல்கள் மீதான ஆர்வமும் சிந்தனையும் பாராட்டுதலுக்குரியது. அந்த வகையில் தமிழகத்துக்கு வெளியே அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நூலகங்களில் பாதுகாக்கப்படும் இத்தகைய நூல்களைப் பற்றிய செய்திகளை பொது மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை எமது முயற்சிகளைத் தொடர்வோம் எனத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கின்றோம்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2019 மின்தமிழ்மேடை | Design by ThemesDNA.com
top