தலையங்கம்: காட்சி 8 [ஜனவரி 2017]

தமிழரின் மரபு வளங்களைக் காப்போம்

அறிவுத்தேடல் கொண்ட சிந்தனை புதியன படைக்கும் ஆற்றலைக் கொடுக்கும். மனிதன் ஆதிகாலம் தொட்டு தனக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ள முனைப்புடன் செயல்பட்டதாலும், அப்படிச் செயல்படும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் தீர்க்கவும் வழிகளைத் தேடியதாலும் தான் மனித குல நாகரிகம் என்பது தோன்ற ஆரம்பித்தது. அப்படித்தோன்றிய நாகரிகங்கள் தாம் படிப்படியாக மனித வாழ்வில் பல்வேறு தளங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தகைய மாற்றங்களில் ஒன்றே அறிவியல் வளர்ச்சி.

நம்பிக்கைகள் சார்ந்து இயங்கும் தளத்திலிருந்து மாற்றாக, ஆராய்ந்து அறிந்து கொள்ளும் மனப்பாங்குடன் மனிதன் ஈடுபட முனைந்ததன் விளவே அறிவியல் கண்டுபிடிப்புக்கள். ஒவ்வொரு நொடியும் உலகின் எங்கோ ஒரு இடத்தில் புதிய கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த உலகமும் இது சூழ்ந்திருக்கும் பிரபஞ்சமும் எல்லையிலா சவால்களை மனித குலத்திற்கு அளிக்கும் வல்லமை பொருந்தியனவாக இருக்கின்றன. அந்தச் சவால்களை எதிர்நோக்க மனிதகுலம் சிந்திக்கும் திறனோடு செயல்பட வேண்டியது இன்றியமையாதது.

தமிழ்ச்சமூகத்தில் பாரம்பரியம் என்ற சொல்லைத் தவறாகப்பயன்படுத்தும் ஒரு போக்கினைக் கடந்த காலங்களில் காண்கின்றோம். கண்மூடித்தனமாக சில நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டு அறிவிற்கு எந்த இடத்தையும் தராது செயல்படும் போக்கை “பாரம்பரியம்” பேணுதல் எனத் தவறாகப் பிரச்சாரம் செய்ததன் விளைவே இத்தகைய சிந்தனை முடக்கம் ஏற்பட்டதற்குக் காரணமாக அமைகின்றன. இதற்கு மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்றால் மீண்டும் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டியது தேவையாகின்றது. அத்தகைய அறிவுத்தேடலுக்கு ஆதாரங்களை வழங்கும் களஞ்சியங்களாக அமைபவை நூலகங்களும் அருங்காட்சியகங்களுமாகும்.

தமிழர் சூழலில் அருங்காட்சியகங்கள் என்றால் பள்ளி மாணவர்கள் குழுவாகச் சென்று ஏதாவது பொருட்களைப் பார்த்து விட்டு வரும் கூடங்கள் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்துவன தான் நூலகங்களும் அருங்காட்சியகங்களும் என்ற மனப்போக்கு உறுதியாக பெரும்பாலான தமிழ் மக்கள் மனதில் படிந்திருக்கின்றது. இத்தகைய போக்கு மாற வேண்டுமெனில் அருங்காட்சியகங்கள் பற்றிய பல தகவல்களை இளம் வயதிலேயே சிறார்களுக்கு ஊட்ட வேண்டியது நம் கடமை என்பதனை உணர்ந்து 2016ம் ஆண்டு இறுதி தொடக்கம், தமிழ் மரபு அறக்கட்டளை பள்ளி/கல்லூரி அருங்காட்சியகம் என்ற ஒரு கருத்தினை முன்னெடுத்திருக்கின்றோம்.

இந்த முயற்சியின் விளைவாக 206 டிசம்பர் மாதத்திலும் ஜனவரி 2017 லும் கீழ்க்காணும் பள்ளிகளில் தமிழ் மரபு அறக்கட்டளை , “பள்ளி/கல்லூரி அருங்காட்சியகங்களை” தொடக்கியுள்ளோம்.
· சிவகங்கை மாவட்டம், மணலூர், அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி
· மதுரை வன்னிவேலம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி
· மதுரை சங்கரலிங்காபுரம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி
· பாளையங்கோட்டை, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
· ஈரோடு, குமாரபாளையம், எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி
· ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

வருகின்ற மாதங்களில் இந்த முயற்சி படிப்படியாக ஏனைய கல்விக்கூடங்களிலும் முன்னெடுக்கப்படும்.

தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஏற்பட்டுள்ள சட்ட ரீதியான தடையை எதிர்த்து இளைஞர் சமூகம் எழுச்சியுடன் குரல் கொடுக்கும் நேரமிது.

இது நம்பிக்கை தரும் ஒரு அறிகுறி!

அறிவார்ந்த, சிந்திக்கும் ஆற்றலைக் கொண்ட இளம் சமூகத்தை உருவாக்க தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுக்கும் இந்தக் கல்விக்கூடங்களில் அருங்காட்சியகம் என்ற கருத்தினை செயல்படுத்த எம்மோடு இணைந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம். வருக!

அன்புடன்
முனைவர். சுபாஷிணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2019 மின்தமிழ்மேடை | Design by ThemesDNA.com
top