தலையங்கம்: காட்சி 7 [அக்டோபர் 2016]

தமிழின் தொண்மையை அறிவோம் அதன் வரலாற்றைக் காப்போம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் மொழி சார்ந்த ஆய்வுகள், வரலாற்றுப் பாதுகாப்பு முயற்சிகள்: மொழி சார்ந்த ஆய்வுகள், வரலாற்றுப் பாதுகாப்பு முயற்சிகள் என்பன பன்முகத் தன்மை கொண்ட நடவடிக்கைகளின் வழியாகத்தான் சாத்தியப்படுத்த இயலும். இன்றைய கால சூழலில் வரலாற்று தொன்மங்களைப் பாதுகாக்கத் தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்களைப் பயன்படுத்துவது என்பது பெருகத் தொடங்கிவிட்டது. இன்று மின்னாக்கம், டிஜிட்டல் பதிவுகள் என்பன முயன்றால் எளிதில் சாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள். இவை துறை சார் அறிஞர்கள் அல்லது வல்லுநர்களுக்கு மட்டுமன்றி சாமானியர்களுக்கும் சாத்தியமே எனும் வளர்ச்சி நிலை வந்துவிட்டதைக் காண்கின்றோம்.

அதற்கு நல்ல உதாரணமாக அமைவது கைத்தொலைபேசி சாதனமே. வயது வேறுபாடு, பொருளாதார நிலை வேறுபாடு என்ற எல்லைகளைக் கடந்து கைத்தொலைபேசி பயன்பாடு என்பது பொதுமக்கள் மத்தியில் பெருகிவிட்டது. இக்கைத்தொலைப்பேசியைக் கொண்டு புகைப்படங்களும் விழியப்பதிவுகளும், ஒலிப்பதிவுகளும் எடுத்து அவற்றைத் தம்மைச் சார்ந்தோரிடையே பகிர்ந்து கொள்வது என்பது இன்று வழக்கமாகிவிட்ட நிலை என்பது கண்கூடு. இது தொழில்நுட்பப் புரட்சி ஊடகத்துறையில் ஏற்பட்டிருக்கும் ஒரு மாபெரும் மாற்றம். இதனைக்காணும் போது வரலாற்றுப்பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளில் தம்மளவில் ஈடுபட விரும்பும் எல்லோருமே தங்களால் பங்களிக்க முடியும் என்ற நிலை வந்துள்ளது. வரலாற்று ஆர்வலர்கள், தங்கள் கைத்தொலைபேசியைக் கொண்டே புராதன சின்னங்களைக்காணும் போது அவற்றைப் புகைப்படம் எடுத்தல், அவற்றை விழியப் பதிவாக்கி யூடியூப் பக்கத்தில் வலையேற்றுதல் என்பன போன்ற வகையில் தகவல் சேகரித்து தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்குத் தம்மால் இயன்ற வகையில் பங்களிக்கலாம்.

வரலாற்றுப் பாதுகாப்பு எனும் ரீதியில், தமிழ் மரபு அறக்கட்டளை எனும் இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களில் சீரிய சில முயற்சிகளை முன்னெடுத்துச் செயலாற்றி வருகின்றோம். அதில் குறிப்பிடத்தக்கனவாக இருப்பவை இரண்டு.

முதலாவதாக, தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று, ஆவண பாதுகாப்பு மின்னாக்கத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாக கூகிள் நிறுவனத்தின் கூகிள் கலாச்சார மையத்துடன் (Google Cultural Institute) தமிழ் மரபு அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கின்றோம். இது நமது முயற்சிகளில் மேலும் ஒரு மைல்கல். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி தமிழ் மரபு அறக்கட்டளையின் தேர்ந்தெடுக்கப்பட டிஜிட்டல் ஆவணங்கள் கூகிள் கலாச்சார மையத்தில் தனிப்பகுதியில் வெளியிடப்பட்டு , இணைய வாசிப்பாளர்களை அணுகும் வகையில் எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் இதன் வழி விரிவான ஆய்வுக்கூடங்களையும் ஆய்வாளர்களையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் சேகரங்கள் சென்றடையும் வாய்ப்பு அமைந்துள்ளது.

அடுத்ததாக, டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் கடந்த மே மாதம் நான் நேரில் சென்று மின்னாக்கம் செய்து வந்த ஓலைச்சுவடி மின் பதிவுகளை வாசித்து அதனைப் பதிப்பிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம். ஃபெட்னா 2016 நிகழ்வில் நான் கலந்து கொண்ட போது அறிமுகமான தன்னார்வலர்கள் சிலரது ஒத்துழைப்பினால் இந்த முயற்சி சீரிய வகையில் தற்சமயம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஊர்க்கூடித்தேர் இழுத்தால் தானே மாற்றத்தைக் காண முடியும். அப்படி ஒரு மாற்றத்திற்கு நாமே முன்னுதாரணமாக இருப்போமே. இணைந்து செயலாற்ற வாருங்கள்!

அன்புடன்
முனைவர் சுபாஷிணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2019 மின்தமிழ்மேடை | Design by ThemesDNA.com
top